இலங்கை இராணுவபத்தின் பிரதானியாக சவேந்திர சில்வாவை நியமிதிருப்பதானது, இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தோல்வியை வெளிப்படையாக காட்டுவதாக உலகத் தமிழர் பேரவை கூறியுள்ளது.
இலங்கையின் புதிய இராணுவப் பிரதானி நியமனம் குறித்து உலகத் தமிழர் பேரவை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த நியமனம் தமிழ் சமூகத்தை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் இந்த நியமனம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்த நிலையை கருத்தில் கொண்டு இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து ஜெனீவாவில் கூடுதல் கவனம் செலுத்தி பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் உலக் தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது.
அத்துடன் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை உண்மையாக நிறைவேற்றுவதில் இலங்கை தோல்வி கண்டுள்ளது என்பதனை இந்நியமனம் சர்வதேச சமூகத்திற்கு தெளிவுபடுத்தியுள்ளதாகவும் உலகத் தமிழர் பேரவையின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.