சென்னையில் கடந்த 4 ஆம் திகதி ஆரம்பமாகிய புத்தகக் கண்காட்சியில் இலங்கை எழுத்தாளர்களாகிய வெற்றிச்செல்வி, தீபச்செல்வன், வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா, நிஜத்தடன் நிலவன் போன்றோரின் புத்தகங்களும் பிபிசி தமிழோசையின் வடமாகாண செய்தியாளராகப் பணியாற்றிய ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகத்தின் புத்தகமும் இடம்பெற்றிருக்கின்றன. இந்தக் கண்காட்சி 20 ஆம் திகதி நிறைவு பெறுகின்றது.
வெற்றிச் செல்வியின் போராளியின் காதலி, ஈழப்போரின் இறுதிநாட்கள், ஆறிப்போன காயங்களின் வலி ஆகிய நூல்களும், தீபச்செல்வனின் நடுகல் நாவல், வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகாவின் (லதா கந்தையா) கவிதைத் தொகுப்பாகிய சுவாசம் மட்டுமே சுடுகலனாய்….., நிஜத்தடனின் வலிசுமந்த நினைவுகள் நேர்காணல்கள், பொன்னையா மாணிக்கவாசகம் எழுதிய கால அதிர்வுகள் ஆகிய நூல்களும் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றிருக்கின்றன.
மேலும் புலம்பெயர்ந்துள்ள மற்றும் தமிழகத்தில் உள்ள சில எழுத்தாளர்களின் புத்தகங்களும் வெளியாகியுள்ளது. குணா கவியழனின் போருழல் காதை, வாசுமுருகவேலின் கலாதீபம் லொட்ஜ், அ.ரவின் பிகேஎம் என்கிற புகையிரத நிலையம், தேவகாந்தனின் நாவல், அகரமுதல்வனின் உலகின் மிக நீண்ட கழிப்பறை, சேரனின் இரண்டு கவிதை புத்தகங்கள் போன்றவையும் வெளிவந்துள்ளன.
146, போதிவனம், 205, டிஸ்கவரி புக் பெலஸ், 276 தமிழ் மண் பதிப்பகம், 88 யாவரும் பப்ளிஷர்ஸ் போன்ற நூல் கண்காட்சி விற்பனைப் பிரிவுகளில் இந்த நூல்கள் காணப்படுகின்றன.