முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மீண்டும் ஆட்சிக்கு வருவதே சிறந்ததென பொலனறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், லசந்த விக்ரமதுங்க மற்றும் பிரதீப் எக்னலிகொட ஆகிய ஊடகவியலாளர்கள் படுகொலைக்கு காரணமானவர்கள் தற்போது ஐக்கிய தேசிய கட்சியில் உள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பேருவளையில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் எந்ததொரு விசாரணையினையும் இதுவரை மேற்கொள்ளாத அரசாங்கம், ஏனைய சாதாரண விடயங்களுக்கு மாத்திரம் குற்றப்புலனாய்வு பிரிவினரை நாடுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டில் இடம்பெற்ற அனைத்து வன்முறை சம்பவங்களுக்கும் காரணமானவர்கள் இந்த அரசாங்கத்தினுள் காணப்படுகின்றமையே அதற்கு காரணம் எனவும் அதனாலேயே விசாரணைகள் ஒழுங்கான முறையில் இடம்பெறுவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்
மேலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சியில் மாத்திரமே இன, மத பேதங்கள் மற்றும் வன்முறைகள் ஆகியவற்றுக்கு இடமளிக்கப்படவில்லை எனத் தெரிவித்த அவர் நாட்டிற்குள் இலங்கையர் என்ற கோணத்தில் பௌத்தம், முஸ்லிம், கத்தோலிக்கம், இந்து என அனைத்து மதத்தவர்களையும் ஒன்றாக இணைந்து செயற்பட மகிந்த ஆட்சியினாலேயே முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.