சிரியாவிலிருந்து அமெரிக்க படைகள் விலகுவதற்கு ஆரம்பித்து விட்டதாக அமெரிக்க கூட்டுபடைகளின் செய்தி தொடர்பாளர் சீன் ரியான் தெரிவித்துள்ளார். சிரியாவில் 2011-ம் ஆண்டு முதல இடம்பெற்றுவரும் உள்நாட்டுப்போரினையடுத்து அங்கு பயன்படுத்தி ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கமும் ஏற்பட்டுள்ளதனையடுத்து அவர்களைக் கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்க படைகள் சிரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
2015-ம் ஆண்டு முதன்முறையாக அப்போதைய ஜனாதிபதி ஒபாமா உத்தரவின்பேரில் சிரியா சென்ற அமெரிக்க படையினர் அங்கு ஐ.எஸ். தீவீரவாதிகள் நிலைகள் மீது வான்தாக்குதல்களை மேற்கொண்டு பல நகரங்களை அவர்களிடமிருந்து மீட்டிருந்தனர்.
இந்தநிலையில் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டதாகவும், எனவே அமெரிக்கப் படைகள் அங்கிருந்து திரும்ப பெறப்படவுள்ளதாக ஜனாதிபதி டிரம்ப் கடந்த மாத இறுதியில் அறிவித்திருந்தார்.
அமெரிக்கா தனது ராணுவத்தை திரும்ப பெற்றால், அது ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான போர் நடவடிக்கையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என டிரம்பின் சொந்த கட்சியிலேயே இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியதனையடுத்து உடனடியாக திரும்பப் பெறப்போவதில்லை என டிரம்ப் அண்மையில் தெரிவித்திருந்தார்.
எனினும் சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் விலகத் தொடங்கி விட்டதாக அமெரிக்க கூட்டுபடைகளின் செய்தி தொடர்பாளர் சீன் ரியான் நேற்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது