ஆப்கானிஸ்தானின் பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அசதுல்லா காலிட் என்பவர் மீது தடை விதிக்குமாறு, மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆப்கானிஸ்ததானுக்கு உதவி வழங்கும் முக்கியமான நாடுகளிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காலிட் மீது முன்வைக்கப்படும் போர்க் குற்றச்சாட்டுகள், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் ஆகியன தொடர்பிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் பதில் பாதுகாப்பு அமைச்சராக காலிட்டை, ஜனாதிபதி அஷ்ரப் கானி நியமித்திருந்தார். தலிபான்களுக்கு மிகவும் எதிரானவராகக் கருதப்படும் இவரின் நியமனம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது.
கடந்த 2005ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கஸ்னி மற்றும் தெற்கு கந்தகார் பகுதிகளுக்கான ஆளுநராக இவர் பணியாற்றிய போது, கொலைகளிலும் சித்திரவதையிலும் சட்டவிரோதப் போதைப்பொருள் வர்த்தத்திலும் ஈடுபட்டார் எனக் குற்றஞ்சாட்டப்படிருந்தது.
இந்நிலையில், அவரது நியமனம் தொடர்பாக அறிக்கையை வெளியிட்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம், பாரதூரமான மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் தொடர்பாக, நம்பத்தகுந்த ஆதாரங்கள், அவரின் அரசாங்கக் காலம் முழுவதும் தொடர்ந்தன எனக் குறிப்பிட்டுள்ளது.