தமிழர்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் இனிய தைத்திருநாளாக அமைய வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
உலகெங்கும் வாழும் தமிழர்கள் இன்று தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடிவரும் நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வெளியிட்டுள்ள தனது வாழ்த்துச் செய்தியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்,
“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என மகாகவி பாரதி பாடியதிலிருந்து தமிழர்கள் உழவுத் தொழிலுக்கு எத்தனை முன்னுரிமை அளித்துள்ளனர் என்பதை உணரக்கூடியதாக இருக்கின்றது.
விவசாயத்தை பிரதான வாழ்வாதாரமாகக் கொண்ட இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை முறையையே அவர்கள் கொண்டிருந்தார்கள் என்பதையும் இது புலப்படுத்துகின்றது.
அத்தோடு வாழ்வின் ஆதாரமான விவசாயத்திற்கு நீர், ஒளி, வெப்பம், காற்று ஆகியவற்றை உருவாக்க உதவிவரும் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் முகமாக உலகெங்கும் வாழும் தமிழர்கள் பண்டுதொட்டு கொண்டாடிவரும் தைப்பொங்கல் தினத்திற்கு எனது வாழ்த்துச் செய்தியை அனுப்பி வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
பால் பொங்கி வழிவதைப் போல் அனைவரது உள்ளங்களிலும் அன்பும் மகிழ்ச்சியும் பெருகிப் பிரவாகித்து நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனேயே தமிழ் மக்கள், தமது விளைச்சலினால் பெற்றுக்கொண்ட புத்தரிசி மற்றும் தானியங்களோடு தூய பாலும் சர்க்கரையும் கலந்து பொங்கி மகிழ்கின்றனர்.
பல இன, மத, கலாசார சமூகத்தைக் கொண்ட எமது நாட்டின் கலாசார பன்மைத்துவத்தின் செழுமைக்கு இத்தகைய பண்டிகைகள் சிறந்த வாய்ப்பாக அமைகின்றன என்பதே எனது நம்பிக்கையாகும்.
‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பது நமது சகோதர தமிழ் மக்கள் மத்தியில் இருந்துவரும் உறுதியான நம்பிக்கையாகும். அந்த நம்பிக்கை கைக்கூடும் வகையில் மலர்ந்திருக்கும் இப்புத்தாண்டு அவர்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற வழிவகுக்கும் ஆண்டாக அமைய வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.
இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான வலிமையான உறவினை மென்மேலும் மெருகூட்டும் வகையிலும் தமிழ் கலை, கலாசாரத்தினை வெளிப்படுத்தும் வகையிலும் தைத்திருநாளைக் கொண்டாடி மகிழும் இலங்கைவாழ் தமிழ் மக்களுக்கும் உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்கும் எனது இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இனவாதத்தைத் தோற்கடிப்பதற்கு இத்தைத்திருநாளில் அனைத்து சமூகங்களும் ஒன்றிணைய வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்,
“சிறந்த விளைச்சலை வழங்குவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்த சூரிய பகவானை வணங்கி, அதற்குப் பங்கிளிப்புச் செய்த மாடுகள் உட்பட முழு இயற்கைக்கும் நன்றிக்கடன் செலுத்தும் நாளாக தைத்திருநாள் காணப்படுகின்றது.
முதலாவது விளைச்சல் திருவிழாவைக் கொண்டாடுவது விவசாய சமூகங்களில் தொன்மைக் காலந்தொட்டு காணப்பட்டு வரும் முக்கியமானதொரு சமய வழிபாட்டு நிகழ்வாகும்.
அவ்வாறான சமய வழிபாட்டு நிகழ்வாகக் கருதப்படும் தென்னிந்தியாவில் ஆரம்பமான தைப்பொங்கல் திருநாள், தற்போது உலகம் முழுவதும் தமிழ் மக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடும் மிகவும் முக்கியமான கலாசாரப் பண்டிகையாக மாற்றம் பெற்றுள்ளது.
தைப்பொங்கல் பண்டிகையின் அனைத்துச் சம்பிரதாயங்களும் மனிதனுக்கும் இயற்கைக்குமிடையிலான சகவாழ்வினை அர்த்தமுள்ளதாக மாற்றியமைப்பதுடன், மனித சமூகத்தில் அமைதி, மகிழ்ச்சி, செழிப்பினை நோக்கமாகக் கொண்டு அவை நிறைவேற்றப்படுகின்றன.
இது தமிழ் மக்களுக்கு மாத்திரமன்றி முழு உலக மக்களுக்கும் சமத்துவம் மற்றும் நன்றிக்கடன் செலுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்தியம்பும் முக்கிய சந்தர்ப்பமாகும்.
இன, மத அடிப்படைவாத சக்திகளைத் தோற்கடித்து ஜனநாயகத்தை வெற்றி பெறச் செய்துள்ள சந்தர்ப்பத்தில், இம்முறை தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாடக் கிடைத்தமை மகிழ்ச்சியான விடயமாகும்.
பல்வேறுபட்ட சமூகங்களின் சமய, கலாசார உரிமைகளுக்கு மதிப்பளித்து ஒற்றுமையாக வாழ்வதன் பெறுமதியை வலியுறுத்துவதுடன், தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் அனைத்து சகோதர தமிழ் மக்களுக்கும் எனது உளப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘தைத்திருநாள் உழவர் பெருநாள் மட்டுமல்ல, நன்றியறிதல் எனும் உயரிய மனப்பாங்கை வெளிப்படுத்துவதுமாகும் இது தமிழ் மக்கள் உலகிற்கு எடுத்துரைக்கும் நலன்மிகு முன்னுதாரணமாகும்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது ஆன்றோர் வாக்கு அதற்கமைய எதிர்காலத்தில் தமிழ் மக்கள் இன்னல்கள் நீங்கி நலங்களும் வளங்களும் பெற்று வாழ வேண்டும்.
அத்தோடு நாட்டில் நிலவுகின்ற இயற்கை சீற்றத்திலிருந்து மீண்டு அனைவரும் மீள எழு எழுச்சி பெறுவோம். அதற்காக அனைவரும் ஒன்றிணைவோம்.
எனது நீண்ட அரசியல் வரலாற்றில் நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர், பிரதமர், ஜனாதிபதி என எல்லா பதிவிகளையும் வகித்த ஒருவன் என்பதோடு இலங்கை பிரஜை என்ற ரீதியில் எனது நடவடிக்கைகள் இன மத பாகுபாடுகள் அற்ற வகையிலும், எமது அன்னைத் திருநாட்டின் பொதுநலன்கள் சார்ந்தனவாகவே இருக்கின்றன.
அதேப் போன்று இன்று நாட்டின் எதிர்கட்சி தலைவர் என்ற வகையிலும் அனைவரும் ஒற்றுமையாக வாழும் அரசியல் தீர்வை நாட்டு மக்கள் பெற்றிட வேண்டுமென பிராத்திக்கின்றேன்’ என தெரிவித்தள்ளார்.
நியாயமான அரசியல் தீர்வின் ஊடாக மக்களின் எதிர்காலம் வளமடைய வாழ்த்துக்கள்: இரா.சம்பந்தன் :
சமத்துவம் மற்றும் நீதியின் அடிப்படையில் உருவாகும் ஒரு நியாயமான அரசியல் தீர்வின் ஊடாக எம்மக்களின் எதிர்காலம் வளமடைய இந்நன்னாளில் பிரார்த்தனை செய்வோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
“இலங்கை வாழ் அனைத்து தமிழ் மக்களுக்கும் எனது இனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
மனித வாழ்வின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கான இயற்கை வளங்களை அருளும் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் இந்த உழவர்தின திருநாளில், தமது சொந்த நிலங்களில் குடியேற முடியாமலும் குடியேறிய நிலங்களில் பயிர்செய்ய முடியாமலும் உள்ள எமது மக்களின் துயரங்கள் நீங்க வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்.
மேலும் சமத்துவம் மற்றும் நீதியின் அடிப்படையில் உருவாகும் ஒரு நியாயமான அரசியல் தீர்வின் ஊடாக எம்மக்களின் எதிர்காலம் வளமடைய இந்நன்னாளில் பிரார்த்தனை செய்வோமாக.
எமது மக்களின் நிலங்கள் அதிக விளைச்சலையும் செழிப்பையும் தந்து எம்மக்கள் தன்னிறைவுள்ள சமூகமாக மீண்டெழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். அனைவருக்கு
‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ ஆனால் தமிழ் மக்களுக்கு மங்கலாகவே தெரிகின்றது – சி.வி.
‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பார்கள் ஆனால், தமிழ் மக்களுக்கு வழிகள் யாவும் மங்கலாகவே தெரிகின்றன என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தைத்திருநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘அரசியல் யாப்பு, தேர்தல்கள், ஜெனிவாக்கூட்டங்கள் எல்லாமே தமிழ் மக்களுக்கு மங்கலான பாதைகளையே காட்டி நிற்கின்றன.
எமது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத் தமிழ்ப் பேசும் மக்கள்கூட பல விதங்களில் பிரிந்தே காணப்படுகின்றனர். அரசியல் ரீதியாக, மத ரீதியாக, சமூக ரீதியாக இன்னும் பல வழிகளில் எமது மக்கள் பிரிந்தே நிற்கின்றார்கள்.
மேலும் அண்மைக் காலங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் அடைமழை காரணமாக பல இடங்களில் எம் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றார்கள்.
இவ்வாறான சூழலிலே ஆதவன் தைத்திருநாளில் மேலெழுந்துள்ளான். இதுவரை அவன் செய்த நன்மைகளுக்கு நாம் நன்றி செலுத்தும் இந்நாளில் இனிவரும் காலத்தில் மங்கலான பாதைகளுக்கு ஒளியூட்ட அவனிடம் இறைஞ்சுவோம்.
தமிழர்கள் அனைவருக்கும் ஒருமித்த ஒன்றுபட்ட வாழ்க்கையைக் கொடுத்து நம்பிக்கையூட்டும் எதிர்காலத்தை அவர்களுக்கு அவன் அருள வேண்டும்’ என மேலும் தெரிவித்துள்ளார்.