எதிர்வரும் ஏப்ரல் முதலாம்திகதி முதல் மருந்தகங்களில் விற்கப்படும் மருந்து, மாத்திரைகளுக்கு கட்டாயம் பார்கோட் அச்சிட வேண்டும் என இந்திய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்திலுள்ள ஒரு சில மருந்தகங்களில் மருத்துவச் சீட்டு இல்லாமலேயே மருந்து, மாத்திரைகள் கொடுக்கப்படுவதுடன் சில நேரங்களில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதலாக விற்பதும் நடைபெறுகின்றது.
மேலும் சில கடைகளில் காலாவதியான மாத்திரைகளும் விற்பனை செய்யப்படுவதனையடுத்து இதைத் தடுக்கும் நோக்கில் மத்திய அரசு இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.
மருந்து, மாத்திரைகளுக்கு கட்டாயம் பார்கோட் அச்சிட வேண்டும் என்பதுடன் பார்கோட்டில் மருந்தின் பெயர், தயாரிப்பாளர், சந்தை விலை, தயாரிப்பு, காலாவதியாகும் திகதி என்பன இடம் பெற்றிருக்க வேண்டும் எனவும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒரு பொருள், எங்கு, எப்போது தயாரிக்கப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ள இந்த பார்கோட் தொழில்நுட்பம் உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது