எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸவை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் சநதிக்கவுள்ளார். இதற்கான உத்தியோகபூர்வமான அழைப்பு புதுடில்லியிலிருந்து எதிர்கட்சி அலுவலகத்திற்கு கிடைத்துள்ளது.
இந்த அழைப்பை ஏற்றுள்ள மகிந்த ராஜபக்ஸ எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இந்தியாவுக்கு செல்லவுள்ளநிலையில் இதன்போது இந்தியப் பிரதமருடன் பேச்சுக்களை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கடந்த ஆண்டு, ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி இலங்கையில் ஆட்சி கவிழ்ப்பு இடம்பெற்றமைக்கு முன்னதாக இந்தியாவிற்கு மகிந்த ராஜபக்ஸ சென்றிருந்த நிலையில் அதன் பின்னர் இலங்கையில் பெரும் மாற்றங்கள் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இலங்கையில் யாரும் எதிர்பாராத அரசியல் மாற்றம் ஏற்பட்ட போதும் அம் முயற்சி தோல்வியில் முடிவடைந்த நிலையில், தற்போது எதிர்கட்சித் தலைவராக பதவி ஏற்றுள்ள மகிந்த ராஜபக்ச மீண்டும் இந்தியப் பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.