ஏழு அம்ச கோரிக்கையை முன் வைத்து தபால் நிலைய ஊழியர்களால் முன்னெடுத்து வரும் வேலை நிறுத்த போராட்டம் இன்று (21) இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. இந்த போராட்டத்தினால் மலையகத்தில் காணப்படும் தபால் நிலையங்களும் மூடப்பட்டுள்ளது. இதனால் பெருந் தோட்ட தொழிலாளர்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக இன்று (21) புஸ்ஸல்லாவ தபால் நிலையம் மூடபட்டிருந்ததனால் இப்பிரதேசத்தில் உள்ள 22 பெருந்தோட்டங்களில் உள்ள மக்கள் தபால் நிலையம் வந்து திரும்பிச் சென்றனர்.
பெரும்பாலும் தோட்டங்கள் தோறும் தபால் நிலையங்கள் இல்லை என்பதனால் நகரப்பு;றங்களையே நாடி செல்ல வேண்டி உள்ளது. அதற்கும் நீண்ட தூரம் நடந்தும் கூடிய பணம் செலுத்தி வாகனங்களில் செல்ல வேண்டும்.
இவ்வாறு வந்தவர்கள் பெரும் ஏமாற்றத்துடன் வீடு திரும்புகின்றனர். சிலருக்கு தபால் நிலைய ஊழியர்களால்; வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுத்து வருவது தெரியாது. அதே போல் தோட்டங்களுக்கான தபால் விநியோகங்களும் தடைபட்டுள்ளன.
பொதுவாக மலையக தோட்டப்புறங்களுக்கு கடிதங்கள் கிடைப்பது என்பது எப்போதுமே தாமதம் என்னும் நிலையில் தபால் நிலைய ஊழியர்களால் முன்னெடுத்து வரும் வேலை நிறுத்த போராட்டத்தால் இந் நிலை மேலும் அதிகரிக்கும் என கவலை வெளியிடப்பட்டுள்ளது.