165
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள கிராமங்களில் அபிவிருத்தி பணிகள் பாராபட்சமாக மேற்கொள்ளப்படுவதை கண்டித்து நேற்று (23) புதன் கிழமை காலை மடு பிரதேசச் செயலகத்திற்கு முன் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு,தமது கோரிக்கை அடங்கிய மகஜரை வடமாகாண ஆளுனர் கலாநிதி சுசேன் ராகவனுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
-குறித்த மகஜரில் மேலும் குறிப்பிடுகையில்,,,
மடு பிரதேசமானது 76 கிராமங்களைக் கொண்ட பெரியதொரு பிரதேசமாகும். இங்கு 4080 குடும்பங்களைச் சேர்ந்த 13 ஆயிரத்து 370 நபர்கள் வாழ்ந்து வருகின்றன. இவர்களில் 549 பெண் தலைமைத்துவக் குடும்பங்களும் அடங்குகின்றன என்பதும் ஒரு துயரச் செய்தியாகும். 30 வருடகால உள்நாட்டு யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இப்பிரதேசமும் ஒன்றாகும்.
உயிரிழப்பு,சொத்திழப்பு என்பவற்றுடன் உட் கட்டுமானங்களின் பேரழிவுகளும் இம்மக்களை வெகுவாகப் பாதித்துள்ளன. 2009 ஆம் ஆண்டு இடம் பெற்ற இறுதி யுத்தத்தின் பிற்பாடு பல்வேறு பட்ட வாக்குறுதிகளோடு மீள் குடியேற்றம் செய்யப்பட்ட இம்மக்கள் இன்று வரை ஏமாற்றத்தையும், அசௌகரியங்களையும், துன்பியல் வாழ்வினையும் முன்னெடுக்க வேண்டிய துற்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
இலங்கை நாட்டின் எந்தப் பகுதியிலும் இன்று காணமுடியாத மிக மோசமான வீதிகளையும் ,பொதுச் சேவைகளையும் இப்பிரதேசத்திலுள்ள கிராமங்களில் காணலாம். இந்நாட்டின் அனைத்து மக்களும் அனுபவிக்கின்ற வசதிகளையும்,வாய்ப்புக்களையும் அனுபவிக்கும் சகல உரிமைகளையும் கொண்டிருக்கும் இம்மக்கள் ஏதிலிகளாய், புறம் தள்ளப்பட்டோராய், உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகமாய் ஒதுக்கப்பட்டிருப்பதையே இந்நிலைகள் சுட்டிக்காட்டுகின்றன.
அரச சேவைகளையும்,பொதுச் சேவைகளையும் வழங்கும் அதிகாரிகள் இக்கிராமங்களுக்கு செல்ல முடியாதளவிற்கு மோசமான வீதிகளும்,மக்கள் இக்கிராமங்களில் வாழ முடியாது வேறு இடங்களுக்கு இடம் பெயரும் அளவிற்கான பற்றாக்குறைகளும் நிறைந்த கிராமங்களாக இவை ஆக்கப்பட்டுள்ளன.
வீதி அபிவிருத்தி:-
பிரதான வீதிகள், உள்ளகவீதிகள் என்று அபிவிருத்திப் பணிகள் செய்யப்பட வேண்டியவை பல உண்டு. இவ்வீதிகளின் பாழ்பட்ட நிலையினால் மக்கள் நாளாந்தம் பல தரப்பட்ட துன்பங்களுக்கு முகம் கொடுக்கின்றார்கள். இதனால் அரச அதிகாரிகள்,மற்றும் ஏனைய சேவை வளங்குனர்கள் இக்கிராமங்களுக்கு வருகை தர முடியாதுள்ளது.
பாடசாலை மாணவர்கள், வயோதிபர்கள், நோயாளிகள், கர்ப்பிணித் தாய்மார், ஊனமுற்றோர் என்று பலரும் தங்கள் பயணங்களை மேற்கொள்ள முடியாதளவிற்கு திண்டாடுகின்றார்கள்.
வீதிமின்விளக்குகள் பொருத்தல்:-
பல கிராமங்கள் வீதி விளக்குகள் இன்றி இருள் சூழ்ந்துள்ளன. இரவு வேளைகளில் திருடர்களின் தொல்லைகளுக்கும், மது பாவனையாளர்களின் பிரச்சனைகளுக்கும், இளைஞர்களின் சீரழிவுகளுக்கும் ஏதுவான சூழலாக இவை அமைந்துள்ளன.
இதனால் மாணவர்கள் மாலை நேர வகுப்புகளிற்கு சென்று திரும்புவதற்கும்,பெண்கள் இரவில் பயணம் செய்வதற்கும் பாதுகாப்பற்ற நிலையே நிலவுகின்றது.
குடிநீர் வசதிகள்:-
குடி நீருக்கான கிணறுகள் இன்மையினால் ஆற்று நீரை குடி நீராகக் கொள்ளும் குடும்பங்கள் இன்றும் வாழ்கிறார்கள் என்றால் அது இக்கிராமங்களில் தான் உண்டு. இதன் காரணமாக சிறு நீரக பாதிப்பிற்கு உட்பட்டிருக்கும் நோயாளிகளும், வேறு நீர் தொடர்பான தோல் நோய்களுக்கு உட்பட்டவர்களும் உள்ளார்கள்.
புனரமைக்கப்படாத அல்லது சுத்தம் செய்யப்படாத பொதுக் கிணறுகள் உண்டு.வெட்டுக் கிணறுகள், குளாய் கிணறுகள் அமைக்கப்பட வேண்டிய கிராமங்கள் உண்டு.நிலக்கீழ் நீர் வழங்கள் செயற்திட்டங்களுக்கு உட்படுத்த வேண்டிய கிராமங்கள் உண்டு. கடும் வரட்சி காலங்களில் நீர் தாங்கிகள் மூலமாக நீர்விநியோகம் செய்ய வேண்டிய தேவைகளும் இங்கு உண்டு.
போக்குவரத்து சேவைகள்:-
சின்ன வலயன் கட்டு, விளாத்திக்குளம், பரசன்குளம் போன்ற பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மன்னார் அல்லது வவுனியா சென்று தங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதானால் ஒரு நாளை முழமையாகவே இதற்காக வீணாக்க வேண்டியுள்ளது. காரணம் இக்கிராமங்களுக்கான போக்கு வரத்து சேவைநாளுக்கு ஒரு முறை என்ற அடிப்படையில் உள்ளது.
காலையில் சென்று தங்கள் அலுவல்களை முடிக்கும் மக்கள் மாலை வரை காத்திருந்து தான் வீடு திரும்ப வேண்டிய துற்பாக்கிய நிலை.
மருத்துவசேவைகள்:-
பிரதான வைத்தியசாலைகள் அற்ற பிரதேசமாக இது இருப்பதனால் மேலதிக சிகிச்சைகளுக்கான அம்புலன்ஸ் சேவைகள் போதுமானதாக இல்லை. இதனால் உயிரிழப்புகள் ஏற்பட்ட சந்தர்ப்பங்கள் பல வுண்டு. முக்கியமாக, இரணை இலுப்பைக்குளம் கிராமத்தில் மட்டுப்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஆதார வைத்தியசாலை உண்டு.
ஆனால் அங்கு நிரந்தரமான வைத்தியர் இன்னும் நியமிக்கப்படவில்லை. இது தொடர்பான கடிதங்கள் அனுப்பியும் இதுவரை தீர்வு எட்டப்படாமல் மக்கள் பல துன்பங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றார்கள்.
பாடசாலைஅபிவிருத்தி:-
ஆசிரியர் பற்றாக்குறை,கட்டிட வசதிகளின்மை,கற்றல் வளங்கள் அற்ற பாடசாலைகள் பல உண்டு. விளாத்திக்குளம் போன்ற கிராமங்களில் தரம் 1 முதல் தரம் 5 வரையான வகுப்புகளே இருப்பதனால் மேற்கொண்ட வகுப்புகளுக்கு அயல் கிராம பாடசாலைகளுக்கு செல்ல வேண்டியதால் பல மாணவர்கள் கற்றலில் ஆர்வம் குறைந்து காணப்படுகின்றார்கள்.
இவர்களுக்கான போக்கு வரத்துகளும் சவால் நிறைந்ததாகவே உள்ளது. தரம் 9 வரையாவது உயர்த்துவதற்கான செயற்பாடுகளையே இம்மக்கள் எதிர் பார்க்கின்றார்கள்.
இளைஞருக்கான தொழில் வாய்ப்பு:-
இக் கிராமங்களைச் சேர்ந்த பல இளையோர் தொழில் வாய்ப்பு இன்மையால் சமூகச் சீர் கேட்டு நடவடிக்கைகளில் ஈடு படுகின்றார்கள். வீணாக நேரங்களைச் செலவிடுகின்றார்கள்.
கசிப்பு உற்பத்தியை உடன் நிறுத்த நடவடிக்கை:-
சமூகச் சீர்கேட்டு நடவடிக்கைகளில் ஒன்றான கசிப்பு உற்பத்தி அரச அதிகாரிகளின் பாதுகாப்புடன் முன்னெடுக்கப் படுகின்றதாகவே தோன்று கின்றது. காரணம் மக்களாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அவற்றை அழிக்கவோ ,நிறுத்தவோ முடியாதளவிற்கு தொடர்ந்து நடை பெறுகின்றது.
சின்ன வலயன்கட்டு, முள்ளிக்குளம், தட்சனா மருதமடு, பாலம்பிட்டி போன்ற கிராமங்கள் நல்ல உதாரணம். புhடசாலை மாணவர்கள் உட்பட பலரும் இதனால் பாதிக்கப்படுகின்றார்கள். பெண்கள் நிம்மதியாக வாழ முடியாத சூழல் உருவாகிவருகின்றது.
குளங்கள் புனரமைப்பு:-
நெல் உற்பத்தி, மேட்டு நிலப் பயிற்செய்கை, கால் நடைவளர்ப்பு, நன்னீர் மீன்வளர்ப்பு போன்ற வாழ்வாதாரங்களைப் பிரதானமாகக் கொண்ட இக்கிராமங்களில் பல குளங்கள் புனரமைக்கப்படாமல் நீர் வீணாக்கப்படுகின்றது.
வளங்கள் சுரண்டப்படுவதை தடுக்கவும்:-
எமது கிராமங்களில் ஆறுகளை அண்டியுள்ள கிராமங்களான பன்னை வெட்டுவான், குஞ்சுக்குளம், பெரிய முறிப்பு, முள்ளிக்குளம் போன்ற வற்றில் சட்ட விரோதமான முறையில் மண் அகழ்வு இடம் பெறுகின்றது.
அரச அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டும் இவை இன்றும் தொடர்கின்றது. அத்துடன், மக்கள் குடியிருப்பு கிராமங்களில் காட்டு இலாகாவில் எல்லைக்கற்கள் நாட்டப்பட்டுள்ளன.
மக்கள் குடியிருப்பிற்கு சொந்தமான, ஏதுவான காணிகள் அரச உடமையாக மாற்றப்பட்டு மக்கள் நிலங்கள் அபகரிக்கப் படுகின்றன.
விளையாட்டுமைதானம் அமைத்தல்:-
சில கிராமங்களின் புதிதாக மைதானங்கள் அமைக்க வேண்டியும் சில கிராமங்களில் மைதானங்களை புனரமைக்க வேண்டியும் உள்ளது.
மயானங்களைபுனரமைத்தல்:-
பல கிராமங்களில் மயானங்கள் புனரமைக்கப்படாமல் உள்ளது.
நீர்வடிகால்கள் அமைத்தல் :-
சீரான வடிகால் அமைப்புகள் இல்லாமையால் மழை காலங்களில் வெள்ளம் வீடுகளுக்குள் ஏறுகின்ற நிலை காணப்படுகின்றது.
ஆகவே,மேற்கூறப்பட்டுள்ள பிரதானமான பிரச்சனைகளுக்கு உடன் தீர்வு கண்டு எம் மக்களில் நிம்மதியான வாழ்விற்கு வழிசமைக்குமாறு தங்களைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.என மடு பிரதேச கிராமிய அமைப்புக்கள் இணைந்து அனுப்பியுள்ள மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் பிரதிகள் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை,வன்னி மாவட்ட அமைச்சர்,பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love