யாழ்ப்பாணம் நெடுங்குளம் பகுதியில் காணிச் சுவீகரிப்புக்கு எதிராக மக்கள் மேற்கொண்ட எதிர்ப்பைத் தொடர்ந்து, நிலம் அளக்கும் நடவடிக்கைகள் கைவிடப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில், 300 பரப்புக் காணியை அரசாங்கம் சுவீகரிப்பதற்காக, நிலம் அளக்கும் பணிகள் இன்று முன்னெடுக்கப்படவிருந்தன.
இந்நிலையில், காணி உரிமையாளர்கள் தமது காணிகளை சுவீகரிக்க அனுமதிக்கமாட்டோம் என்றும் மீறி சுவீகரித்தால், சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து தடுப்போம் என்றும் கூறி, இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு வெளியிட்டனர்.
அதன் பின்னர், கிராம சேவகர் மற்றும் ஏனைய அதிகாரிகளின் கோரிக்கைக்கு அமைய, காணி சுவீகரிப்பை எதிர்த்தவர்கள் மகஜர் ஒன்றிணை பிரதேச செயலாளருக்கு வழங்கியதைத் தொடர்ந்து, நிலம் அளக்கும் நடவடிக்கைகள் கைவிடப்பட்டுள்ளன.
குறித்த காணியை சுவீகரிக்கப் போவதாக யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தினால், காணி சுவீகரிப்பு அறிவித்தல் பத்திரம் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது.
குறித்த அறிவித்தல் பத்திரத்தில், உரிமை கோரப்படாத காணியை சுவீரிக்கவுள்ளதால், காணி உரிமையாளர்கள் குறித்த இடத்தில் இருந்தால், உடனடியாக பிரதேச செயலகத்தை தொடர்பு கொள்ளுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய காணி உரிமையாளர்கள், காணி உரிமத்திற்குரிய ஆவணங்களைக்கொண்டு பிரதேச செயலகத்திற்குச் சென்றுள்ளனர்.
எனினும், காணி சுவீகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதால், யாரும் உரிமை கோர முடியாதென பிரதேச செயலாளர் அச்சுறுத்தும் தொனியில் காணி உரிமையாளர்களிடம் கூறியுள்ளார். அதனைத்தொடர்ந்து இந்த விடயம் தொடர்பில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரிடமும் காணி உரிமையாளர்கள் முறையிட்டுள்ளனர்.