போபால் விசவாயு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதலாக 7,800 கோடி ரூபா இழப்பீடு கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. கடந்த 1984-ம் ஆண்டு மத்திய பிரதேசத்தின் போபாலில் செயல்பட்டு வந்த யூனியன் கார்பைட் நிறுவனத்தில் இருந்து நள்ளிரவு நேரம் மெத்தில் ஐசோசயனேட் என்ற விசவாயு கசிந்ததில் அதனை சுவாசித்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
மிகப்பயங்கர பேரழிவாக கருதப்படும் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு யூனியன் கார்பைட் நிறுவனம் 715 கோடி ரூபாவினை இழப்பீடாக வழங்கியிருந்தது.
தற்போது அமெரிக்காவை சேர்ந்த இந்த நிறுவனத்தை டவ் கெமிக்கல்ஸ் நிறுவனம் வாங்கியுள்ள நிலையில் விசவாயு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க யூனியன் கார்பைட் மற்றும் பிற நிறுவனங்களுக்கு உத்தரவிடக்கேட்டு மத்திய அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. ஏற்கனவே வழங்கிய 715 கோடி ரூபாக்கு மேல் கூடுதலாக 7,844 கோடி ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதாக அறிவித்த நீதிபதிகள் இந்த மனு மீது ஏப்ரல் மாதம் விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.