தலைமைச் செயலக ஊழியர்கள் இன்று போராட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எச்சரிக்கை விடுத:துள்ளார்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளை நீக்க வேண்டும் உள்ளிட்ட ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஜனவரி 22ஆம் திகதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் இறங்கியுள்ள ஆசிரியர்கள் நேற்றைய தினத்துக்குள் பணிக்குத் திரும்ப இறுதியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதிலும் தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் Nமுற்கொண்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டத்துக்கு போக்குவரத்துத் துறை ஊழியர்கள் உட்பட பலரும் ஆதரவளித்துள்ள நிலையில் இன்றையதினம் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் 30 ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தவும், கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிடில் பெப்ரவரி முதலாம் திகதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் தமிழ்நாடு தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலர்கள் சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலர் கழகம், தமிழ்நாடு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் மாநில மைய சங்கம் உள்ளிட்ட ஊழியர் சங்கங்கள் அறிவித்திருந்தன.
இந்த நிலையில் ஜாக்டோ ஜியோ ஊழியர்களுக்கு ஆதரவளித்த தலைமைச் செயலக ஊழியர்கள் எட்டு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதையடுத்து இன்று திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என தலைமைச் செயலக ஊழியர் சங்கம் அறிவிப்பு வெளியிட்டது.
இதையடுத்து, தலைமைச் செயலக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் ஊதியம் வழங்கப்படாது எனவும் தெரிவித்துள்ளார்.