181
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையின் சுதந்திர தினத்தை தமிழர் தாயகத்தில் கரிநாளாக பிரகடனப்படுத்தி துக்க தினமாக கடைப்பிடிக்குமாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கேட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போதே இந்தக் கோரிக்கையை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் விடுத்தார்.
அத்துடன், இலங்கையின் சுதந்திர தினம் தொடர்பான யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் நிலைப்பாட்டை விளக்கும் அறிக்கையொன்றையும் அவர்கள் வெளியிட்டனர்.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இலங்கை காலணித்துவ ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்று 71 ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையிலும், உள்நாட்டு போர் முடிவுக்கு வந்து பத்து வருடங்கள் கடந்த நிலையிலும் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டோர் இதுவரை கண்டறியப்படவில்லை, தமிழர் நிலங்களில் இருந்து இராணுவம் வெளியேறவில்லை, அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை, மகாவலி அபிவிருத்தி என்ற பெயரில் தமிழரது பூர்வீக நிலங்கள் சூறையாடப்படுகின்றன,
தொல்பொருள் திணைக்கள ஆய்வு என்ற வகையில் வணக்கஸ்தலங்கள் ஆக்கிரமிக்கபடுகின்றன, புலிகள் மீளுருவாக்கம் என்ற போர்வையில் அப்பாவி இளைஞர்கள் கைது செய்யப்படுகின்ற அவலம் தொடர்கிறது, மறுவாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் கைது செய்யபட்டும் காணாமல் ஆக்கப்படும் சூழ்நிலையில் சுதந்திரமான சுவாசக்காற்றை சுவாசிக்க தமிழ் மக்களுக்கு இன்றுவரை தடைகளே காணப்பட்டுவருகின்றது.
இந்த நிலையில் யாருக்கு சுதந்திரம் கிடைத்தது என்கிற கேள்வியே எல்லாவற்றையும் முந்திக்கொண்டு கேள்விக்குறியாய் எம்முன்னே எழுந்து நிற்கிறது.
பயங்கரவாத தடைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு நாற்பது வருடங்கள் கடந்துபோன இன்றைய நிலையிலும் அந்த சட்டம் போர் முடிந்தும் நீக்கப்படாமல் நடைமுறையில் இருப்பதானது காலங்காலமாக தமிழரை அடக்கி ஒடுக்கி அடிமையாக்கப்பட்ட இனமாக வைத்திருக்க விரும்புவதன் வெளிப்பாடே ஆகும்.
இலங்கை சுதந்திரம் அடைந்த நாள்தொட்டு இலங்கையில் நடந்த கலவரங்கள் தமிழர்களை இனவழிப்பு செய்யும் கலவரங்களாகவே நடந்துள்ளன.
இந்த இனவழிப்பின் உச்சமே முள்ளிவாய்க்கால் இனவழிப்பு போர் இலங்கையின் சிறுபான்மை இனங்களில் முதன்மையாக இருந்த நாம் இன்று மூன்றாம் நிலையை நோக்கி பின்தள்ளப்படுமளவுக்கு எமது உறவுகள் அழிக்கப்பட்டு உள்ளார்கள்.
இலங்கையில் ஆட்சிப்பீடம் ஏறுபவர்கள் யாராக இருந்தாலும் எவ்வாறான சட்டதிருத்தங்கள் நடந்தாலும் அது ஒற்றையாட்சி கட்டமைப்பினையும் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தையும் பேணிப் பாதுகாக்கும் வகையிலேதான் அமையும் என்பதனை வரலாறு தெளிவாக எமக்கு கற்றுத்தந்துள்ளது.
ஆதலால் வரலாற்றில் இருந்து நாம் பாடங்கற்றுக்கொள்ள வேண்டும். ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் அரசியல் ரீதியாக வென்றெடுக்கப்பட வேண்டிய விடயங்களைக் கூட தூரநோக்கின்றி செயற்பட்ட தமிழ் அரசியல் தலைமைகளால் பெற்றுக்கொள்ள முடியாமல் போய்விட்டமை தமிழ் இனத்தின் துர்ப்பாக்கிய நிலையே ஆகும்.
இனப்பிரச்சனையில் இலங்கையின் மெத்தனப் போக்கினை சர்வதேசமும் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாலும், முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றது இனப்படுகொலை தான் என்பதை அறிந்தும் அதற்கான சர்வதேச நீதி விசாரணைப் பொறிமுறையினை உருவாக்காமல் கால அவகாசம் வழங்கிக் கொண்டிருப்பதாலும் சர்வதேசத்தின் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கை வீண் போய்விடுமோ என்று எம்மை கவலை கொள்ள வைக்கிறது.
இன நல்லிணக்கம் என்பதனை வெற்று வார்த்தைகளால் உருவாக்கிட முடியாது. இனங்களிற்கு இடையில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமெனில் முள்ளிவாய்க்காலில் நடந்தது இனப்படுகொலை என்பதனை ஏற்றுக்கொண்டு அதற்கான நீதியை வழங்குவதன் மூலமாகவே இன நல்லிணக்கம் நோக்கி நகர முடியும்.
எனவேதான் ஈழத் தமிழர்கள் தொடர்ந்தும் அடக்குமுறைக்குள் இருக்கும் நிலையில் இலங்கையின் சுதந்திர தினத்தை தமிழ் மக்களிற்கு சுதந்திரம் கிடைத்தநாளாக ஏற்றுக்கொள்ள முடியாது மாறாக இது பிரித்தானியா காலணித்துவவாதிகளிடம் இருந்து சிங்கள தலைவர்களின் கைகளிற்கு இலங்கையின் அரசியல் அதிகாரம் கைமாற்றப்பட நாளே இலங்கையின் சுதந்திர தினம் என்பதால் தமிழ் மக்களை மேலும் புதைகுழியினுள் தள்ளிய ஒரு நாள் என்பதனால் நாம் இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக அறிவிக்கிறோம்.
அன்றைய தினம் மக்களின் குரலை சர்வதேசத்திடம் வெளிப்படுத்தி நீதி கேட்கும் முகமாக தமிழர் தாயகத்தில் இடம்பெறும் போராட்டங்களிற்கு வலுச்சேர்க்குமாறு சிவில் சமூக அமைப்புகளைம், தமிழ் உணர்வாளர்களையும், இளைஞர்களையும் உரிமையோடு வேண்டி நிற்கிறோம் – என்றுள்ளது.
Spread the love