2023-ம் ஆண்டு உலக கிண்ணப் போட்டியை நடத்தும் வாய்ப்பை இந்தியாவிடம் இருந்து பறிக்கும் எண்ணம் இல்லை என ஐசிசியின் தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார்.
2021-ம் ஆண்டு சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியையும், 2023-ம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கெட் போட்டியையும் நடத்தும் உரிமையை இந்தியா பெற்றுள்ளது. இந்தநிலையில் ஐ.சி.சி. போட்டிகளுக்கு மத்திய அரசு வரிவிலக்களிக்க மறுக்கும் விவகாரத்தினால் இவ்விரு போட்டிகளையும் நடத்தும் வாய்ப்பை இந்தியா இழக்கும் அபாயம் உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஐ.சி.சி. நடத்தும் போட்டிகளுக்கு வரிவிலக்கு பெறுவது உலக கிரிக்கெட்டுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும் இதன் மூலம் கிடைக்கும் நிதியை கொண்டு, அதிக வருமானம் பெறாத மேற்கிந்தியதீவுகள் போன்ற நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களுக்கு உதவுகிறோம்.
இவ்விரு போட்டிகளையும் இந்தியாவில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றும் திட்டம் எதுவும் இல்லை எனத் தெரிவித்த அவர் போட்டிக்கு நிச்சயம் வரிவிலக்கு கிடைக்கும் என நம்பிக்கை இருக்கிறது எனவும் அதற்கு இன்னும் போதிய காலஅவகாசம் உள்ளது எனவும் ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார்.