அரசாங்கம் நல்லிணக்கம் தொடர்பாக சர்வதேசமெங்கும் பிரச்சாரம் செய்துவரும் ஒரு சூழ்நிலையில் 2017ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி முதல் 14ஆம் திகதிவரையில் தேசிய நல்லிணக்கவாரத்தைப் பிரகடனப்படுத்தியுள்ள சூழலில் நீதி அமைச்சரின் செயற்பாடுகள் என்பது கேலிக்குரியதாகவும் கண்டனத்திற்குரியதாகவும் இருக்கின்றது.
மட்டக்களப்பில் 21.12.2016ஆம் திகதியன்று நீதியமைச்சர் ஆற்றிய உரை தொடர்பில் கருத்து தெரிவித்து விடுத்துள்ள அறிக்கையில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ். க.பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவரது அறிக்கையின் முமுவிபரம் வருமாறு:
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார தேரருடன் விஜயம் செய்த நீதி அமைச்சரும் புத்தசாசன அமைச்சருமான விஜயதாச ராஜபக்ச அவர்கள் அங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஒரு விசேட சந்திப்பை நடத்தினார். அந்த விசேட சந்திப்பில் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பட்டியே சுமனரத்ன தேரரின் அநாகரிகமான நடவடிக்கைகள் தொடர்பாகவும் அவருடைய நடவடிக்கைகளினால் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் தொடர்பாகவும் அமைச்சர் அவர்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டதுடன்இ அவ்வாறான நடவடிக்கைகளில் தேரர் ஈடுபடக்கூடாதென்றும் வலியுறுத்தப்பட்டது. அவற்றை ஏற்றுக்கொண்ட அமைச்சர் அவர்கள் அதன் பின்னர்இ பொதுபலசேன செயலாளரையும் மட்டக்களப்பு விகாராதிபதியையும் சந்தித்து கலந்துரையாடினார்.
பின்னர் ஊடகவியலாளருடன் பேசிய அமைச்சர் அவர்கள் மட்டக்களப்பில் சிங்கள மக்கள் குறித்து குரல் கொடுப்பதற்குப் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இல்லையென்றும்இ மட்டக்களப்பு விகாராதிபதி சுமனரத்ன தேரர் அந்த மக்களுக்காகக் குரல் கொடுக்கிறார் என்றும் ஆனால் இங்கிருக்கக்கூடியவர்கள் பௌத்த பிக்குமார்கள் இனவாத, மதரவாதரீதியில் செயற்படுவதால்தான் பிரச்சினைகள் ஏற்படுவதாக நாட்டில் ஒருவித மாயத்தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள் என்றும் கூறினார்.
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் பொதுபலசேனா எவ்வாறு செயற்பட்டது என்பதும் இப்பொழுதும் தொடர்ச்சியாக எவ்வாறு செயற்பட்டு வருகிறாரக்ள் என்பதும் அமைச்சருக்குத் தெரியாத விடயம் அல்ல. முழுக்க முழக்க இனவாதக் கண்ணோட்டத்துடன் ஏனைய மதங்களுக்கு எதிராகத் திட்டமிட்ட வகையில் செயற்பட்டு வருவதை இன்றும்கூட காணக்கூடியதாக இருக்கின்றது.
அதேபோல்தான் மட்டக்களப்பு விகாராதிபதி சுமனரத்ன தேரரும்கூட சிங்களத்தில் இருக்கக்கூடிய மிகவும் அநாகரிக வார்த்தைகளைத் தெரிவு செய்து தமிழ் மக்களையும் அரச அதிகாரிகளையும் திட்டித்தீரத்ததை இன்றும் நாங்கள் சமூக வலைத்தளங்களில் காணமுடியும். இவ்வாறானவர்களை அமைச்சர் சிங்கள மக்களின் குரலாக ஏற்றுக்கொள்வதும் அவர்கள் சிங்கள மக்களின் பிரதிநிதிகள் என்று சான்றிதழ் கொடுப்பதும் அமைச்சர் எவ்வளவுதூரம் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கின்றார் அல்லது சிங்கள பௌத்த தீவிரவாதத்துடன் இணங்கிப்போகிறார் என்பதையே காட்டுகிறது.
இத்தகையவர்களிடமிருந்து நல்லிணக்கத்தையும் எதிர்பார்க்க முடியாது. நல்லிணக்கப் பிரகடனங்களில் அர்த்தமும் இருக்காது. நீதியமைச்சு மற்றும் புத்தசாசன அமைச்சின் அதிகாரத்தைக் கொண்டிருக்கக்கூடிய ஒருவர் நீதியை முழுமையாகக் கைவிட்டு இனவாதிகளான பௌத்த பிக்குமாரைக் காப்பாற்றும் வகையில் செயற்படுவதானது ஏனைய இனங்களையும் மதங்களையும் மலினப்படுத்தும் ஒரு செயலாகவே பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.
ஓர் அரசியல் சாசன மாற்றம் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற சூழலில்இ நீதியமைச்சரின் கருத்துக்களும் செயற்பாடுகளும் ஏனைய தேசிய இனங்கள் மத்தியில் நம்பிக்கையீனங்களையும் அச்சவுணர்வுகளையுமே உருவாக்குகின்றது. இதனை எமது கட்சி வன்மையாகக் கண்டிப்பதுடன்இ அமைச்சர்கள் இவ்வாறாக பக்கசார்பாக நடந்துகொள்வதானது நாட்டில் நல்லிணக்கத்தையும் ஒருமைப்பாட்டையும் கட்டியெழுப்புவதற்கு வழிசமைக்காது என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.
சுரேஷ். க. பிரேமச்சந்திரன்
தலைவர்
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி
1 comment
‘மட்டக்களப்பு விகாராதிபதி சுமனரத்ன தேரர் மற்றும் ஞானசார தேரர் போன்றோர், கிழக்கு மக்கள் சார்பில் குரல் கொடுக்கின்றார்கள்’, என்று நீதியமைச்சர் கூறியிருப்பதன் மூலம் தேரர்களின் நடவடிக்கைகளை அவர் நியாயப்படுத்துகின்றார் என்றே தோன்றுகின்றது?
பச்சை இனவாதம் பேசிய தேரர்கள் குறித்து இப்படிப் பொறுப்பற்றுப் பேசும் இதே நீதியமைச்சர்தான், வடக்கு முதலமைச்சர் சில நியாயமான கோரிக்கைகளை முன்வைத்தபோது, ‘அது போன்ற கோரிக்கைகளை முன்வைக்கும் உரிமை அவருக்கு இல்லை’, என்று கூறியவராவார்!
நல்லாட்சி அரசில் நீதியமைச்சராக இருக்கும் தகுதி கிஞ்சித்தும் திரு. விஜயதாச ராஜபக்சவுக்கு இல்லை? வடக்கு கிழக்குத் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் வாழும் தமிழ் மக்களுக்கும்தான் அவர்களுக்கான தமிழ்ப் பிரதிநிதிகள் இல்லை! அதற்காக, அப்பிரதேச இந்து மதத் தலைவர்கள் இவ்வாறு குரல் கொடுக்க இவரது நீதித் துறை அனுமதிக்குமா?
என்னதான் நல்லாட்சி என்று சொன்னாலும், இவர்கள் எவருக்கும் இனவாதிகளைப் பகைத்துக் கொண்டு அரசியல் செய்யும் துணிவோ அன்றி அவசியமோ இல்லையென்பதே உண்மை! இதற்கான ஒரே தீவு, இறைமையுள்ள சுயாட்சித் தீர்வொன்றைத் தமிழருக்கு வழங்குவதுதான்! சிந்திப்பார்களா அன்றி இனவாதச் சகதியில் வீழ்ந்து இவர்களும் நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்வார்களா?