கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சு மேற்கு வங்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம், மேற்கு வங்க தலைமைச் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
1989 ஆம் ஆண்டில் ஐபிஎஸ் அதிகாரியாக பதவிவகித்த ராஜீவ் குமார் ஒழுக்கமற்ற நடத்தையில் ஈடுபட்டதாகவும், அகில இந்திய பணியாளர்கள் நடத்தை விதிகளை மீறியதாகவும் தெரிவித்து அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில், விசாரணை நடத்துவதற்காக கடந்த 3ஆம் திகதி சிபிஐ அதிகாரிகள் காவல் ஆணையர் ராஜீவ் குமார் வீட்டுக்குச் சென்ற போது சிபிஐ அதிகாரிகளை உள்ளே அனுமதிக்காமல் அவர்களைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று காவல்துறையினர் விசாரித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து சிபிஐ நடவடிக்கைக்கும், மோடி அரசுக்கு எதிராகவும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி 3 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். அவருடன் ராஜீவ் குமாரும் போராட்டத்தில் பங்குபற்றிய நிலையில் ராஜீவ் குமார் விதிகளை மீறி அரசியல் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.