தகவல் அறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்பட்ட இரண்டு புதிய உறுப்பினர்கள் இன்று (22) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களிடமிருந்து நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் தவிசாளர், நீதியரசர் ஏ.டபிள்யு.ஏ.சலாம், கலாநிதி திருமதி செல்வி திருச்சந்திரன் ஆகியோர் ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் பதில் பிரதம நீதியரசராக உயர்நீதிமன்ற நீதியரசர் பிரியசாத் டெப் அவர்கள் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
இதேவேளை இலங்கையை வறுமையிலிருந்து விடுவிக்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் மூலோபாய அணுகுமுறைகள் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று ஜனாதிபதி தலைமையில் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
2030ஆம் ஆண்டளவில் வறுமை நிலையற்ற இலங்கையை கட்டியெழுப்பும் நோக்குடன் உலகளாவிய பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை பூர்த்திசெய்வதற்கு 2017ஆம் ஆண்டிலிருந்து பல செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் இச் செயற்றிட்டங்கள் குறித்த நீண்ட கலந்துரையாடலும் இதன்போது இடம்பெற்றது.