குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கடந்த நான்கு வருடங்களாக அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த குடும்ப பெண் ஒருவரை கெப்பரிக்கொல்லாவ நீதவான் நீதிமன்றம் ரொக்கப் பிணையில் செல்ல அனுமதித்துள்ளது.
மிகவும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குறித்த குடும்பப் பெண் சார்பாக மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு இவ் வழக்கிற்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வந்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் விஸ்வமடு கிராமத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளுக்கு தாயான திருமதி ரவீந்திரன் மதனி (வயது-31) என்ற இளம் குடும்பப்பெண் கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் திகதி அன்று பயங்கரவாத விசாரனை பிரிவினரால் கைது செய்யப்பட்டு வெலிமடை காவல்துறையினரால் பதவிய சுற்றுலா நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இவருக்கு எதிராக தண்டனைக் கோவை சட்டத்தின் கீழ் 443, 369, 394 ஆகிய சட்டத்தின் கீழ் இவ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதோடு, கண்ணிவெடி அகற்றும் பொருட்களை கையாண்டுள்ளமை தொடர்பாகவும் இவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்குகளுக்கான தீர்ப்பு இன்று வியாழக்கிழமை(7) கெப்பரிக்கொல்லாவ நீதவான் நீதிமன்றில் வழங்கப்படும் என எதிர்பார்த்த போதும் இவ் வழக்கை விசாரித்து வந்த நீதவான் ரி.ஜே.பிரபாகரன் இடம் மாற்றம் பெற்றுள்ளமையால் இவ் வழக்குக்கான கோவை தீர்ப்புக்காக அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இருந்தும் இவ் அரசியல் கைதியினை இன்று கெப்பரிக்கொல்லாவ நீதவான் நீதிமன்றில் சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றில் முன்னிலப்பபடுத்தியபோது இவ் சந்தேக நபர்
சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி வீ.எஸ்.நிரஞ்சன் முன்னிலையாகி இருந்ததுடன் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு தலைவர் அருட்பணி.ஏ.ஞாணப்பிரகாசம் அடிகளார் தலைமையில் ஆளுனர் சபையைச் சேர்ந்தவர்களும் ஆகியோரும் இவ் அரசியல் கைதியின் நலன் நோக்கி மன்றில் சமூகமளித்திருந்தனர்.
இதன் போது குறித்த அரசியல் கைதியான பெண்ணை 25 ஆயிரம் ரூபாய ரொக்கப் பிணையில் செல்ல நீதவான் கட்டளைப் பிறப்பித்திருந்தார்.
மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு குறித்த நபரை பிணையில் எடுப்பதற்கு நிதி உதவி வழங்கியிருந்தது.குறித்த வழக்கு விசாரணையின் தீர்ப்புக்காக எதிர்வரும் 27 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.