யாழ்ப்பாணம் நல்லூர் ஆடியபாதம் வீதியில் மரக்காலையில் வேலை செய்யும் நபரைத் தாக்க முற்பட்டார் என்று குற்றஞ்சாட்டப்படும் சந்தேகநபர்கள் கையில் ஆயுதம் வைத்திருந்ததைக் காணவில்லை என்று சாட்சி ஒருவர் யாழ்ப்பாணம் நீதிவான் மன்றில் நேற்றுச் சாட்சியமளித்தார்.
ஆடியபாதம் வீதியில் உள்ள மரக்காலையில் வேலை செய்யும் இளைஞனை இனந்தெரியாத கும்பல் தாக்க முற்பட்ட போது, இளைஞன் அவர்களிடமிருந்து தப்பி ஓடியபோது கிணற்றில் வீழ்ந்துள்ளார். பின்னர் ஊரவர்களால் காப்பாற்றப்பட்டிருந்தார். இந்தச் சம்பவம் கடந்த செப்ரெம்பர் மாதம் இடம்பெற்றிருந்தது. தாக்க முற்பட்டனர் என்ற சந்தேகத்தில் 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களிடமிருந்து கத்தி போன்ற ஆயுதம் ஒன்றை மீட்டிருந்ததாக குற்றஞ்சாட்டி கோப்பாய் காவற்துறையினர் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
யாழ்ப்பாண நீதிவான் மன்றில் நீதிவான் ஏ.எஸ்.பி.போல் முன்னிலையில் வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. அங்கு சாட்சியமளித்த முறைப்பாட்டாளர், ஆடியபாதம் – நல்லூர் வீதியில் உள்ள மரக்காலையில் நின்றிருந்த போது சில நபர்கள் தன்னைத் தாக்குவது போல வந்ததாகவும், தான் தப்பி ஓடும்போது அயல் வீடு ஒன்றின் மதில்மேல் ஏறிப் பாய்ந்தே ஓடியபோது, எதிர்பாராத விதமாக மரக்காலைக்கு அருகில் இருந்த கிணற்றுக்குள் தவறி வீழ்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். காப்பாற்றுமாறு கூக்குர லிட்டபோது, முதலாவது சந்தேகநபர் தான் வீழ்ந்து கிடந்தமையை எட்டிப்பார்த்தார். பின்னர் அங்கு ஒன்று கூடிய ஊர்மக்கள் தன்னைக் கிணற்றிலிருந்து மீட்டனர். மீட்கும்போது ஊர்மக்களுடன் காவற்துறையினரும் நின்றிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
தன்னை விரட்டியவர்களே கிணற்றுக்குள் வீழ்ந்ததும் எட்டிப்பார்த்தனர் என் தான் நினைத்ததாகவும் சாட்சியம் அளித்தார்.சந்தேக நபர்கள் சார்பில் குறு க்கு விசாரணை நடத்திய சட்டத்தரணி மு.ரெமீடியஸ், “மரக்காலைக்கும் கிணற்றுக் கும் இடையில் எவ்வளவு தூரம்?. வந்தவர்களை நீங்கள் அடையாளம் கண்டீர்களா?. கிணற்றில் இருந்து மீட்கப்ப ட்டதும் அவர்களை கண்டீர்களா?. காவற்துறையினர் உங்களை எப்படி அழைத்துச் சென்றனர்?. அழைத்துச் செல்லும்போது சந்தேகநபர்கள் ஆயுதம் ஏதாவது வைத்திருந்தனரா? “ என்று கேட்டார்.அதற்குச் சாட்சியமளித்த அவர்: “மரக்காலைக்கும் கிணற்று க்கும் இடையே 100 மீற்றர் தூரம். என்னை கலைத்தவர்களை நான் சரியாக அப்போது பார்க்கவில்லை. கிணற்றுக்குள் வீழ்ந்தபோது முதலாவது சந்தேக நபர் மட்டுமே என்னை எட்டிப்பார்த்தார். நான் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டபோது முதலாவது சந்தேக நபர் உட்பட ஏனைய நபர்களை நான் சம்பவ இடத்தில் காணவில்லை. என்னைப் பொறுப்பேற்ற காவற்துறையினர், சிலமணி நேரத்திலேயே தமது வாகனத்தில் ஏற்றி காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களைப் காவல் நிலையத்தில் கண்டேன். அவர்களை இந்த வழக்குக்கு முன்னர் பார்த்ததும் இல்லை, பழக்கமும் இல்லை. எனது நண்பர்களுக்கும் இன்னொரு தரப்பினருக்கும் அன்யைய தினம் நல்லூர் பகுதியில் முரண்பாடு ஏற்பட்டிருந்தது. நான் நண்பர்களுடன் நின்றபோதும் முரண்பாடு நடைபெறும்போது நான் அங்கு இருக்கவில்லை. அந்த முரண்பாட்டை நான் அறிந்தமையால்தான் என்னைத் தாக்க வருகின்றனரோ என்ற அச்சத்தில் மதில் பாய்ந்து ஓடினேன்.” -என்று சாட்சியமளித்தார். வழக்கு தொடர் சாட்சியத்துக்காக எதிர்வரும் மார்ச் மாதம் 21 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.