குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் படையினர் வசமிருந்த சைவமங்கையர் கழகத்தின் கட்டிடங்கள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில்,அதற்கான ஆவணங்கள் நேற்று வியாழக்கிழமை(7) மாலை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த காணிக்கான ஆவணத்தை மன்னார் பிரதேச செயலாளர் திருமதி கனகாம்பிகை சிவசம்புவினால் ; சைவமங்கையர் கழகத்தின் தலைவி திருமதி யோகேஸ்வரா சிவாநந்தினியிடம் கையளிக்கப்பட்டது.
1953 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட திருக்கேதீஸ்வரம் சைவமங்கையர் கழகம், பெண்களின் வாழ்வியலை பாதுகாத்து முன்னேற்றும் நோக்கில் மன நிலை பாதிக்கப்பட்ட பெண்கள், கணவனை இழந்த பெண்கள், பெற்றோரால் கைவிடப்பட்ட சிறு பெண்குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுத்து வந்தது.
போர் காரணமாக கழகக் கட்டிடம் மருத்துவ சேவை நிலையமாக இயங்கி வந்தது. 1990 தொடக்கம் 2009 வரை இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது. 2009 நாட்டில் சுமூகமான நிலை ஏற்பட்ட நிலையில் சைவமங்கையர் கழக தலைவி ஜனாதிபதி மற்றும் வடமாகான ஆளுநரிடம் கழகக் கட்டடத்தை இராணுவத்திரிடமிருந்து பெற்றுத் தருமாறு தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தார்.
இதனையடுத்து ஜனாதிபதியின் தனியார் காணிகளை விடுவிக்கும் நிகழ்ச்சி திட்டத்தின் ஊடாக , குறித்த கட்டடங்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் அவற்றை உத்தியோக பூர்வமாக பிரதேச செயலாளர் திருமதி கனகாம்பிகை சிவசம்பு கழக தலைவியிடம் ஒப்படைத்துள்ளார்.
நிகழ்வில் மன்னார் பிரதேச செயலகத்தின் காணி உத்தியோகத்தர் வசந்தன், கிராம அலுவலகர்கள், திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
குறித்த கட்டடங்கள் அமையப்பெற்ற காணி ஐந்து ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. இதில் ஒரு சிறிய பௌத்த குருமடம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. விகாராதிபதிகளுடன் கலந்துரையாடி குறித்த குருமடம் அகற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.