இராணுவ ஆட்சி நடைபெறும் தாய்லாந்தில் அடுத்த மாதம் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அந்நாட்டின் இளவரசி உப்லோரட்டனா மஹிடோல் பிரதமர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
தாய்லாந்தில் 1932-ம் ஆண்டு மன்னராட்சி முடிவுக்கு வந்த பின்னர் ஆட்சி கவிழ்க்கப்படுவதும், ராணுவம் அரியணை ஏறுவதும் வழமையாக நடைபெற்று வருகின்ற நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் யிங்லக் ஷினவத்ரா அரசுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன. பிரதமரை பதவி விலகக்கோரி நடைபெற்ற போராட்டங்களில் பெரும் வன்முறையும் வெடித்திருந்தது.
இந்தநிலையில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் யிங்லக் ஷினவத்ராவின் பிரதமர் பதவியை பறிக்கப்பட்டதுடன இடைக்கால பிரதமராக வர்த்தக அமைச்சராக இருந்த நிவாட்டம்ராங் பூன்சாங் நியமிக்கப்பட்டார்.
எனினும் அங்கு ஆனால் வலுவான தலைமை இல்லாததால் பெரும் அரசியல் குழப்பம் எழுந்துள்ளதனையடுத்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதுடன் ராணுவ தளபதியாக இருந்த பிரயாட் சான்ஓசா பிரதமராக பொறுப்பேற்றார்.
இதனையடுத்து பொதுத்தேர்தலை நடத்தி ஜனநாயக ஆட்சியை கொண்டு வர வலியுறுத்தி மக்கள் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பொதுத்தேர்தலை நடத்தும்படி கடந்த மாதம் அந்நாட்டு மன்னர் மகா வஜ்ரலோங்கோன் ஆணை பிறப்பித்ததனை தொடர்ந்தது பெப்ரவரி மாதம் 24ம் திகதி பொதுத்தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையகம் அறிவித்த போதும் ஆனால் சில காரணங்களால் பொதுத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
எனினும் அதன்படி 500 உறுப்பினர்களை கொண்டு தாய்லாந்து பாராளுமன்றத்துக்கு மார்ச் 24ம் திகதி தேர்தல் நடைபெறும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக தாய்லாந்து இளவரசி உப்லோரட்டனா மஹிடோல் பிரதமர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான நேற்று உப்லோரட்டனா மஹிடோல் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
உப்லோரட்டனா மஹிடோல் முன்னாள் மன்னர் பூமிபோல் அதுல்யாதேஜின் கடைசி மகளும், தற்போதைய மன்னர் மஹா வஜ்ரலோங்கோனியின் சகோதரியும் ஆவார்.
இளவரசி உப்லோரட்டனா மஹிடோல் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்த சில மணி நேரத்தில் தற்போதைய பிரதமர் பிரயாட் சான்ஓசா தானும் களத்தில் இருப்பதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது