நல்லூர் பிரதேசசபையின் எல்லைக்குள் இரசாயன கலவை பயன்படுத்தப்பட்டு பழுக்க வைக்கப்பட்ட பழங்களை கண்டு பிடிப்பதற்கு சிறப்பு செயலணி ஒன்று உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு சபை மண்டபத்தில் த.தியாகமூர்த்தி தலைமையில்நேற்று இடம்பெற்றது.
இந்த அமர்வில் சபை உறுப்பினர் கௌசல்யா, இராசாயண கலவை கலந்த மருந்துக்களை விசிறி பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்வதனை தடுக்கவேண்டும். அதனால் பொதுமக்களுக்கு பெரும் நோய்களை ஏற்படுத்தி உயிர் ஆபத்து கூட ஏற்படலாம் என தெரிவித்து தீர்மானத்தை முன்மொழிந்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த சபை உறுப்பினர் இராசலிங்கம், சந்தைகளிலும் பழக் கடை களிலும் ஏராளமான மருந்து விசிறிய பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனை வாங்கி உட்கொள்பவர்கள் பல பாதிப்புக்களை எதிர்நோக்குகின்றனர்.
எனவே இதற்கென நாம் சிறப்புச் செயலணி ஒன்றை பொதுசுகாதார பரிசோதகர் தலைமையில் உருவாக்கி விரைவான செயற்பாட்டில் இறங்க வேண்டும் என்றார்.
அதனை சபை ஏக மனதாக ஏற்று மருந்தடித்த பழங்களை விற்பனை செய்வதனை தடுக்கவும், விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சுகாதார பரிசோதகர் தலைமையில் விசேட செயலணி ஒன்று உருவாக்க சபை தீர்மானித்துள்ளது.