சுயாதீன ஆணைக்குழுக்கள் மீதான விமர்சனங்கள், போதைப்பொருள் தடுப்புச் செயற்பாடுகளுக்கு இடையூறாக அமைந்துள்ளதென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு – மாளிகாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள லக்ஹிரு மாடிக்குடியிருப்புத் திட்டத்தை, மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரை்த அவர், தற்போது போதைப்பொருள் வியாபாரத்தைத் தடுப்பதற்கான செயற்பாடுகள் மாத்திரமே முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் அவை முற்றாக ஒழிக்கப்படவில்லை இந்த நிலையில், குறுகிய அரசியல் நோக்கமுடையவர்களுக்கு, நீதிமன்றத்தை கால்பந்தாக (“புட் போல்”) பயன்படுத்திக்கொள்ள இடமளிக்கப் போதில்லை என்றும் தெரிவித்தார்.
2015 -2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில், போதைப்பொருள் வர்த்தகம் பெரிதாக உருவெடுத்த போது பாதுகாப்பு அதிகாரிகளை அழைப்பித்து பாதுகாப்புக்காக அதிகமான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமா என கேட்டபோது, அதற்குப் பதிலளித்த அதிகாரிகள், நியாயமான நீதிமன்றம் ஒன்றை பெற்றுத்தருமாரு தன்னிடம் கோரியதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தின் ஊடாக உருவாக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்கள், போதைப்பொருள் தடுப்புச் செயற்பாடுகளை உரிய வகையில் முன்னெடுத்து வருகின்றன என்றும், சிலரின் விமர்சனங்கள் அதற்குத் தடையாக உள்ளதெனவும் தெரிவித்தார். சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்டதையடுத்து காவற்துறையினரும், நீதித்துறை அதிகாரிகளும் சிறப்பாகச் செயற்பட்டு வருவதாகவும், அவர்களின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாதெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களைப் போன்று, காவற்துறையினரின் செயற்பாடுகளில் அரசியல் தலையீடுகள் இருக்கக்கூடாதெனவும் தமது கண்களைக் கட்டிவிட்டு போதைப்பொருள் தடுப்புச் செயற்பாடுகளை செய்யுமாறுப் பணிப்புரை விடுக்கக்கூடாதெனவும் அதிகாரிகள் கோரியதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.