போரினால் கடுமையாக பாதிக்கப்பட்ட வவுனியா கள்ளிக்குளம் மக்கள் தமக்கான வீட்டுத்திட்ட வசதிகளை உடனடியாக செய்து தருமாறு கோரி இன்றையதினம் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். வவுனியா மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டுப் போராடிய மக்கள், அரசாங்க அதிபரிடம் தமது கோரிக்கை கடிதத்தையும் கையளித்துள்ளனர்.
வவுனியா கள்ளிக்குளம் கிராம மக்கள் போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டு நீண்டகாலமாக இடம்பெயர்ந்து அகதிகளாக வாழ்ந்து கடந்த 2011இல் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர். மீள்குடியேற்றம் செய்யப்பட்டு 9 ஆண்டுகள் கடந்த நிலையில் இந்த மக்கள் வீடற்ற நிலையிலேயே வாழ்கின்றதுடன் அவர்கள் ; வசிக்கும் காணிகளுக்குரிய ஆவணங்கள் எதுவும் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் கள்ளிக்குளம் மக்களை பாதிக்கும் வகையில் தனிநபர் ஒருவர் அரசாங்க அதிகாரிகளுக்கு தவறான கடித்தை அனுப்பியுள்ளதாக அந்த மக்கள் தெரிவித்துள்ளதுடன் அரச அதிகாரிகள் தமது பகுதியை பார்வையிட்டு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இன்றைய போராட்டத்தில் வலியுறுத்தினர்.
இந்த விடயம் தொடர்பில், கிராம அலுவலர் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கம் ஊடாக தகவல் அரச அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளது. மக்களின் கோரிக்கை கடிதத்தை பெற்றுக்கொண்ட அரசாங்க அதிபர், உரிய நடவடிக்கைகளின் அடிப்படையில், வீட்டுத்திட்டங்களை வழங்க பணிக்கப்பட்டுள்ளதாகவும், அந்தவகையில் பிரதேச செயலாளருக்கு பாரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.