குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வரணி இயற்றாலையிலுள்ள வீடோன்றில் கொள்ளையிட்ட நகை மற்றும் பணத்துடன் தப்பியோடிய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் வரணி இயற்றாலைப் பகுதியில் கடந்த 5ஆம் திகதி அதிகாலை வாள், கத்தி, பொல்லுகளுடன் புகுந்த மூவர் தூக்கத்தில் இருந்தவர்களை அச்சுறுத்தி சுமார் ஒரு மணி நேரம் வீட்டை சல்லடை போட்டுத் தேடி, நகைகளையும் பணத்தைக் கொள்ளையிட்டனர்.
அத்துடன், அந்த வீட்டில் இருந்த வெளிநாட்டு மதுபானத்தைக் குடித்தது மதுபோதையில் தடுமாறினர். சம்பவத்தை அறிந்த அந்தப்பகுதி இளைஞர்கள் உசாரடைந்ததால் கொள்ளையர்களில் இருவர் பிடிக்கப்பட்டதுடன் ஒருவர் நகைகள் மற்றும் பணத்துடன் தப்பி ஓடியிருந்தார்.
அவ்வாறு தப்பி ஓடியவர் தலைமறைவாகியிருந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை கொடிகாமம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்
அவரால் கொண்டு செல்லப்பட்ட கொள்ளையிடப்பட்ட நகைகள் கோப்பாய் பகுதியில் உள்ள ஒருவரிடம் கைமாறியமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த போதே, பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டார் என காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
இதேவேளை, இந்தக் கொள்ளைச் சம்பவத்துக்கு தகவல் வழங்கியவர் என்ற குற்றச்சாட்டில் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட பின் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.