அவுஸ்ரேலியாவில் சீதனம் வாங்குவதை குடும்ப வன்முறையின் ஒரு பகுதியாக சட்டத்தில் உள்ளடக்கவேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பான ஆய்வினை மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்ட செனட் குழு, அரசிடம் இதனைப் பரிந்துரைத்துள்ளது.
அவுஸ்ரேலியாவில் சீதனம் கொடுப்பது – வாங்குவது தொடர்பாக பொதுமக்களிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட முறைப்பாடுகள் மற்றும் கருத்துக்களின் அடிப்படையில் குறிப்பிட்ட செனட் குழுவினர் ( Senate Standing Committee on Legal and Constitutional Affairs) அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள இறுதி அறிக்கையிலேயே இந்த யோசனை பிரேரிக்கப்பட்டிருக்கிறது.
அவுஸ்ரேலியாவில் தற்போது நடைமுறையிலுள்ள குடிவரவாளர்களுக்கான திட்டங்களின் கீழ் தற்காலிக விஸாவில் உள்ள பெண்களுக்கான பாதுகாப்பு மிகக்குறைவாக உள்ளது என்றும் இந்தச் சூழ்நிலையில் பெண்களுக்கு எதிரான சீதனக்கொடுமை பெரும் எண்ணிக்கையில் நடைபெறுகிறது என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
பல தற்கொலைகள் மற்றும் கொலைகளுக்கு சீதனக்கொடுமை காரணமாக அமைந்திருக்கிறது எனச் சுட்டிக்காட்டியுள்ள இக்குழு, கலாச்சார அடையாளங்களில் ஒன்றாக கடைப்பிடிக்கப்படும் இந்த சீதன நடைமுறையானது அவுஸ்ரேலியாவில் பேணப்படுகின்ற அடிப்படை விழுமியங்களுக்கு முரணாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக திருமணத்தின் பெயரால் பணம் கொடுத்து பெண்களை இன்னொருவரது உடமையாக்கும் இந்த கலாச்சாரம் அவுஸ்ரேலியாவில் பேணப்படுகின்ற பால் சமத்துவ முறைக்கு முற்றிலும் எதிரானது என்றும் இந்த செனட் குழு தெரிவித்துள்ளது.
அத்துடன், அவுஸ்ரேலியாவில் குடியுரிமையுடைய மாப்பிள்ளைகளுக்கு அதிக சீதனம் வசூலிக்கப்படுகின்ற நடைமுறையும் இங்கு இடம்பெற்றுவருகிறது. அதாவது, அவுஸ்ரேலியாவில் குடியுரிமையானது இந்த சீதன நடைமுறையின் கீழ் உயர் விலைக்கு விறக்கப்படுகிறது. சீதனத்தை உறுதிசெய்தபடி கொடுக்காத பெண்கள் அவுஸ்ரேலியாவில் இருந்து திரும்பவும் சொந்த நாட்டுக்கு துரத்தப்படுவதாக மிரட்டப்படுகிறார்கள்.
உறுதியளிக்கப்பட்ட சீதனத்தைவிடவும் அதிக பணத்தை தருமாறு நிபந்தனை விதிக்கும் சம்பவங்களும் அதிகம் இடம்பெறுகின்றன – என்றும் இந்த செனட் குழு தனது ஆய்வுகளின் மூலம் கண்டறிந்துள்ளது.
பெற்றுக்கொண்ட பல்வேறு முறைப்பாடுகளின் பிரகாரம், சுமார் 12 யோசனைகளை அரசிடம் முன்வைத்துள்ள இந்த சட்ட மற்றும் அரசமைப்பு விவகார செனட் குழு, ‘economic abuse’ என்ற பதத்தை ஏற்கனவே உள்ள குடும்பச் சட்டத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
ஆனால் இச்செயற்பாட்டினை குற்றவியல் பிரிவின்கீழ் தண்டிப்பதற்கென்று தனியாக சட்டம் இயற்றப்பட வேண்டும் என இக்குழு பரிந்துரைக்கவில்லை.