உலக அளவில், ஒவ்வொரு ஆண்டும் ஆயுத மோதல்கள் மற்றும் அதன் தாக்கத்தினாலும் பசி பட்டினியாலும் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டுவதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் குழந்தைகளைக் காப்போம் என்னும் தொனிப் பொருளுடன் இயங்கிவரும் சேவ் தி சில்ட்ரன்ஸ் அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அண்மையில் ஜெர்மனியின் முனிச் நகரத்தில் நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்பு மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு அறிக்கையில் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தான், மத்திய ஆபிரிக்க குடியரசு, கொங்கோ ஜனநாயகக் குடியரசு, ஈராக், மாலி, நைஜீரியா, சோமாலியா, தெற்கு சூடான், சிரியா மற்றும் ஏமன் ஆகிய 10 நாடுகளில் அதிகபட்ச அளவில் இந்த உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாடுகளில் மட்டும் 2013 – 2017 ஆண்டுகளுக்டைப்பட்ட காலங்களில் 5 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் இறந்துள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போருக்கு பிந்தைய விளைவுகளினால் நேர்ந்த இழப்புகள் குறிப்பாக அவர்களுக்கு ஏற்பட்ட பசி, மருத்துவமனைகளும் அடிப்படை கட்டமைகளும் சேதமுற்றமை , சுகாதாரப் பாதுகாப்புக்கான பற்றாக்குறை, மேலும் உதவி மறுக்கப்படும் மோசமான சூழ்நிலை போன்றவைகளும் அவர்களது உயிரிழப்புக்கு முக்கிய காரணிகளாக அமைகின்றன.
அத்துடன் ஆயுதக் குழுக்களில் இணைத்துக்கொள்ளுதல், கடத்தப்படுதல் அல்லது பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுதல் ஆகியவற்றையும் இக்குழந்தைகள் எதிர்கொள்ள நேரிடுகிறது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த இருபதாண்டுகளாக உலகில் உள்ள ஐந்து குழந்தைகளில் ஒன்று எந்த நேரத்திலும் போர்வெடிக்கும் அல்லது போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலேயே வாழ நேரிடுகிறது எனவும் கொல்லப்பட்ட அல்லது ஊனமுற்ற குழந்தைகள் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் போர்ச்சூழலின் மறைமுக விளைவுகளினால் மட்டுமே 5 வயதுக்குள் இறந்த மொத்த குழந்தைகளின் எண்ணிக்கை 8 லட்சத்து 70 ஆயிரம் ஆகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.