அமெரிக்கா, மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் விவகாரத்தில் போதுமான நிதியைப் பெறுவதற்காக அமெரிக்காவில் அவசரநிலையை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்றையதினம் பிறப்பித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இந்த சுவர் எழுப்பும் திட்டத்துக்கு ட்ரம்ப் கேட்கும் தொகைக்கும் குறைவாக நிதி ஒதுக்க எதிர்க்கட்சியான ஜனநாயகக்கட்சியினர் சம்மதித்ததனால், பொறுமை இழந்த ட்ரம்ப் பாராளுமன்ற ஒப்புதல் இல்லாமலே நிதிபெறுவதற்காக அவசர நிலையை அறிவித்துள்ளார்.
இந்தநிலையில் ஜனாதிபதி ட்ரம்ப் தனக்கு இருக்கும் அரசியலமைப்பு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துகிறார் என மனித உரிமை ஆர்வலர்களும், ஜனநாயகக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் கண்டித்துள்ளனர்.
இதேவேளை அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் அகதிகள், போதை மருந்து கடத்தல்காரர்கள், குற்றவாளிகள் ஆகியோரைத் தடுக்க இந்தச் சுவர் மிகவும் அவசியமானதாகும்.
இந்தத் திட்டம் மிகப்பெரியது, சிறப்பு வாய்ந்தது. நிதிஒதுக்கீடு மூலம் இந்தத் திட்டத்தை தான் விரைந்து முடிப்பேன் என நேற்றையதினத் செய்தியாளர்களிடம் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தவறு செய்தவர்களிடம் இருந்து அபராதமாக பெறப்பட்ட பணம், ராணுவ கட்டுமானப் பணிகளுக்கான நிதி, போதைப் பொருள் தடுப்பு ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை ட்ரம்ப் சுவர் எழுப்ப ஒதுக்குவார் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 1976-ம் ஆண்டில் இருந்து அமெரிக்காவில் இதுவரை 60 முறை தேசிய அளவில் அவசரநிலை அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி, ஜனநாயகக் கட்சியின் செனட் தலைவர் ஜக் ஸ்குமர் ஆகியோர் கூட்டாக வழங்கிய பேட்டியில், அமெரிக்காவில் ஜனாதிபதி ட்ரம்ப் அவசரநிலையை அறிவித்தது சட்டவிரோதம் எனவும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு ஏற்பட்ட மிகப்பெரிய வன்முறை எனவும் தெரிவித்தனர்.