முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ போர்க்குற்றங்களை இழைத்தமையினாலேயே அவர், ஆட்சியில் இருந்து துரத்தப்பட்டார் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் 2004ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டின் இறுதிப் பகுதி வரை ஆட்சியில் இருந்த மகிந்த ராஜபக்ஸ நாட்டை கொலைக் கலாசாரத்துக்குள் வைத்திருந்ததாகவும் அவரும் அவரது சகோதரர் கோத்தபாயவ ராஜபக்ஸவும் இந்தக் கொலைகளுக்குத் தலைமை தங்கியதாகவும் பிரதமர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன் மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சியில் போர்க்காலத்தின்போது போர் விதிகளை மீறி போர்க்குற்றங்கள் இடம்பெற வழிவகுத்ததாக கூறியுள்ள ரணில், குற்றமிழைத்தவர்களை விட அதற்கு உத்தரவிட்டவர்களும் தலைமை தாங்கியவர்களும்தான் மாபெரும் குற்றவாளிகள் என்றும் இப்போது மகிந்த நல்லபெயர் எடுக்க முயல்வதாகவும் குறிப்பிட்டார்.
இலங்கையில் போரின்போது போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை என்று மகிந்த ராஜபக்ஸ கொழும்பு நகர மண்டபத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற நிகழ்வில் தெரிவித்திருந்தார். ரணில் விக்கிரமசிங்க வடக்குக்குச் சென்று போர்க்குற்றம் இடம்பெற்றிருக்கின்றது என்று ஒப்புக்கொண்டு நாட்டை சர்வதேச சமூகத்துக்கு காட்டிக் கொடுத்து விட்டார் என்றும் அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.
இது தொடர்பில் தமிழ் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த பிரதமர் ரணில், போர்க் காலகட்டத்தில் எந்தச் சந்தர்ப்பத்திலும் போர்க்குற்றம் இடம்பெறவில்லை என்று மகிந்த ராஜபக்ஸ வெட்கம் இல்லாமல் கூறியுள்ளதாகவும் போர்க்குற்றங்களையும், கொலைகளையும் அவர் அரங்கேற்றியதால்தான் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அவரைத் தமிழ் மக்கள் ஓரங்கட்டிதாகவும் தெரிவித்துள்ளார்.
போர்க் காலகட்டத்தில் ஒரு புறம் விடுதலைப்புலிகளும் மறுபுறம் அரச படைகளும் போர்க்குற்றங்களை இழைத்தார்கள் என்றும் இதை நாம் மறுக்க முடியாது என்றும் ஆனால், இவற்றை மறந்து – மன்னித்து நாம் ஓர் நிலைக்கு வர வேண்டும் என்றும் அப்போதுதான் நாட்டில் நல்லிணக்கத்தை நிலைநாட்டலாம் என்றும் பிரதமர் கூறினார்.
பழையதைக் கிளறிக் கொண்டிருக்காமல் நடந்த உண்மைகளை ஏற்றுக் கொண்டு, மறந்து, மன்னித்து, அனைவரும் புதிய வழியில் ஓரணியில் பயணிக்க வேண்டும் என்பதையே வடக்கில் தாம் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதற்கு தாம் சர்வதேசத்திடம் நாட்டை காட்டிக்கொடுத்து விட்டதாக மகிந்த தெற்கில் பொய்ப் பிரசாரத்தை முன்னெடுப்பதாகவும் பல கொலைகளுக்கும் போர்க்குற்றங்களுக்கும் உத்தரவிட்ட அவர், இப்படிப் பொய்யுரைப்பது வெட்கக்கேடு என்றும் ரணில் கூறியுள்ளார்.
மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் நாட்டின் மீது சர்வதேச அழுத்தங்கள் என்றுமில்லாத வகையில் அதிகரித்திருந்த நிலையில், 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த அழுத்தங்களை குறைக்கச் செய்து, கடும் வலுவுடைய ஜெனிவாத் தீர்மானங்களை மென்மையாக்கியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.