யாழ்.கொக்குவில் பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசியதுடன், வாகனங்களையும் தீயிட்டு கொழுத்திய சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற தொலைக்காட்சி ஒன்றின் ஊடகவியலாளரை காவற்துறையினர் தாக்கியுள்ளனர். யாழில் உள்ள தொலைக்காட்சி நிறுவனமொன்றில் பணியாற்றும் 32 வயதுடைய நடராஜா குகராஜ் எனும் ஊடகவியலாளரே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் தெரிவிக்கையில், “சம்பவ இடத்தில் செய்தி சேகரிப்பதற்காக சென்றிருந்தபோது அங்கே காவற்துறையினரும் நின்றிருந்தனர். வழக்கம்போல் நான் சற்று தூரமாக நின்று வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தேன். அப்போது என்னருகில் சிவில் உடையில் வந்த நபரொருவர் தன்னை கோப்பாய் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவற்துறை உத்தியோகஸ்தர் என அறிமுகப்படுத்திக்கொண்டு என்னை அங்கிருந்து செல்லுமாறு கூறினார். அதற்கு நான் என்னை ஊடகவியலாளர் என அறிமுகம் செய்து கொண்டு எனது கடமையை நான் செய்து கொண்டிருக்கிறேன். அப்போது சடுதியாக எனது வாயில் குறித்த நபர் குத்தி என்னை தாக்கினார். எதிர்பாராத திடீர் தாக்குதலால் நான் நிலைதடுமாறி கீழே விழுந்த போதும் ஒருவாறு சுதாகரித்துக்கொண்டு எழுந்தேன். குறித்த தாக்குதல் சம்பவத்தால் எனது வாயிலிருந்து இரத்தம் வடிந்தவாறு இருந்தமையால் நான் அங்கிருந்து விலகி வந்து விட்டேன்” என தெரிவித்தார். தாக்குதலுக்கு இலக்கான ஊடகவியலாளர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.