உலகின் சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை செர்பியா நாட்டினைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் ஜோகோவிச் பெற்றுள்ளார். ஆண்டு முழுவதும் உலகெங்கும் விளையாட்டுத்துறையில் ஆதிக்கம் செலுத்தி சாதனை படைக்கும் வீரர்-வீராங்கனைகள் மற்றும் விளையாட்டுக்கு 2000-ம் ஆண்டு முதல் மொனாக்கோவை சேர்ந்த லாரெஸ் உலக விளையாட்டு அக்கடமி விருது வழங்கி கௌரவித்து வருகிறது.
அந்தவகையில் இந்த ஆண்டுக்கான லாரெஸ் உலக விளையாட்டு அக்கடமி விருது வழங்கும் விழா மொனாக்கோவில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில் உலகின் முதல்தர டென்னிஸ் வீரரான ஜோகோவிச் சிறந்த வீரர் விருதை 4-வது முறையாக கைப்பற்றி உள்ளார். கடந்த ஆண்டு உபாதையிலிருந்து மீண்டு களம் கண்ட ஜோகோவிச் விம்பிள்டன் ,அமெரிக்க ஓபன் மற்றும் அவுஸ்திரேலிய ஓபன் பட்டங்களை கைப்பற்றியிருந்தார்.
அதேவேளை அமெரிக்காவை சேர்ந்த 21 வயதான ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை சிமோனே பைல்ஸ் சிறந்த வீராங்கனை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். அவர் ஒலிம்பிக் போட்டியில் 4 தங்கப்பதக்கமும், உலக சம்பியன்சிப் போட்டியில் 14 தங்கப்பதக்கமும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சரிவில் இருந்து மீண்டு வந்த வீரருக்கான விருதை அமெரிக்காவை சேர்ந்த கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் பெற்றுள்ளார்.
2018-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தையும், கடந்த மாதம் நடந்த அவுஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும் வென்ற ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா திருப்புமுனை ஏற்படுத்திய வீராங்கனை விருதை பெற்றுள்ளதுடன் உலக கிணத்தினை வென்ற பிரான்ஸ் கால்பந்து அணி சிறந்த அணிக்கான விருதினை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது