குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொண்டவர்கள் என்ற குற்றச்சாட்டில் 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர்களிடமிருந்து வாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன எனவும் கோப்பாய் காவல்துறையினர் தெரிவித்தனர்.
தாக்குதலை நடத்தியவர்களில் ஒருவர் கொழும்புக்குத் தப்பிச் சென்று விட்டார் எனவும் அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் காவல்துறையினர் மேலும் தெரிவித்ததாவது: யாழ்ப்பாணம் கொக்குவில் கருவப்புலம் வீதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், வீட்டின் முன் பக்கம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன.
வன்முறையை அடுத்து துரித விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டன. சம்பவ நடைபெற்ற அன்றைய தினம், பெற்றோல் குண்டு வீச வந்த இளைஞர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளின் இலக்கங்களை கருவப்புலம் வீதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி காணொளின் மூலம் அடையாளம் காணப்பட்டன.
அதனையடுத்து நேற்றிரவு சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரால் வழங்கப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர்.
நால்வரும் மானிப்பாய், சுன்னாகம் காவல்துறைப்பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். அவர்களிடமிருந்து 2 வாள்கள், ஒரு கோடரி, கைக் கிளிப்புகள் மற்றும் பல்சர் மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.
ஆவா குழுவைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர் ஒருவர் சம்பவ இடம்பெற்ற வீட்டில் முன்னர் வசித்தார். அவர் தற்போது அங்கு இல்லை. அவரை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்றனர்.