தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்டு, வடக்கில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க அழைப்பு விடுத்துள்ளார்.
பல்வேறு அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைப்பதற்காக, இன்றையதினம் யாழ்ப்பாணம் சென்றிருந்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க அங்கு இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணமும் கிளிநொச்சியும் நவீன நகரங்களாக மாற்றமடையும் என்று தாம் பெரிதும் நம்புவதாகவும் இதற்காக அபிவிருத்திகளை மேற்கொள்ள தாம் பல்வேறு திட்டங்களை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்தும் நகரமாக யாழ்ப்பாணத்தை மாற்றவும் தனது அமைச்சு ரீதியாக தான் நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்ட அவர், மார்ச் மாதம் வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் போது தாம் பல திட்டங்களை கொண்டுவரவுள்ளதாகவும் தமது காலத்திலேயே வடக்கில் மின்சாரம் மற்றும் தண்ணீர் பிரச்சினைகளுக்கான தீர்வினை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
வடக்கில், திருச்செல்வமே இறுதி அமைச்சராக இதுவரை இருக்கிறார். இவருக்கு அடுத்து ஏனையோர் அமைச்சுப்பதவிகளை பெறாத காரணத்தினால் பல்வேறு செயற்பாடுகள் வடக்கிற்கு கொண்டுவரப்படாமலேயே இருக்கின்றன.
கடந்த 50 வருடகாலமாக இந்த நிலை தொடர்கின்றதனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுமந்திரன் உள்ளிட்டவர்கள் அமைச்சுப்பதவியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என தாம் கேட்டுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.