ஒஸ்கர் விருது வழங்கும் விழாவில் வரலாற்றிலேயே முதன்முறையாக இந்த ஆண்டு சிறந்த வெளிநாட்டு படமாக மெக்சிகோ நாட்டின் ரோமா திரைப்படம் பெற்றுள்ளது.
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 91-வது ஒஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகின்ற நிலையில் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் இன்றி நடந்து வருகிறது.
அந்தவகையில் இந்த ஆண்டிற்கான சிறந்த வெளிநாட்டு மொழி படமாக மெக்சிகோ நாட்டின் ‘ரோமா’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் 1970களில், நடுத்தர பணிப்பெண்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதாகும். இது ஒஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 8வது மெக்சிகன் திரைப்படம் ஆகும்.
இத்திரைப்படத்தில் கிளியோ எனும் கதாபாத்திரம், கியூரோனின் வீட்டில் பணிபுரிந்த லிபோரியாவின் உண்மைக் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதாகும். இந்த கதாப்பாத்திரத்தில் யலிட்சா அபராசியோ எனும் அறிமுக நடிகை நடித்திருந்தார். இவர் சிறந்த நடிகைக்கான ஒஸ்கர் விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். மேலும் நெட்ப்ளிக்ஸில் வெளியிடப்பட்ட திரைப்படங்களில் ஒஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு விருது வென்ற முதல் திரைப்படம் ஆகும்.