போர்க்குற்றவாளிகளை அடையாளம் காண்பது முடிவற்ற செயற்பாடு…
போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள இராணுவ வீரர்கள் மற்றும் விடுதலை புலிகள் உறுப்பினருக்கு பொதுமன்னிப்பு வழங்கக்கோரி அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேல் மாகாண மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் இப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெரிவித்த அவர், போர்க்குற்றங்களுடன் தொடர்புடைய செயல்களில் பல தரப்புகள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், இராணுவத்தினரை மாத்திரம் குற்றம் சாட்டுவது பொருத்தமற்றது எனத் தெரிவித்தார்.
புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ள 12 ஆயிரம் விடுதலை புலி உறுப்பினர்களும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இராணுவத்தினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வது நியாயமற்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதுமாத்திரமன்றி மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட அனைத்து தரப்பினரையும் அடையாளம் காண்பது என்பது முடிவற்ற செயற்பாடாகும். எனவே, அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்குவதன் மூலம் இப்பிரச்சினைக்கு அரசாங்கம் முடிவுகட்ட வேண்டும் எனத் தெரிவித்தார்.