ஹூவாய் நிறுவன அதிபரின் மகளை கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்த மேற்கொள்ளப்படும நடவடிக்கைக்கு சீன தூதரகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா விதித்த பொருளாதார தடையை சீனாவின் பன்னாட்டு தொலை தொடர்பு நிறுவனமான ஹூவாய் மீறியுள்ளதாக அந்த நிறுவனத்தின்மீது அமெரிக்கா 23 குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.
இந்த நிலையில், கனடாவின் வன்கூவர் நகர விமான நிலையத்தில் ஹூவாய் நிறுவன அதிபர் ரென் ஜெங்பெய்யின் மகள் மெங்வான்ஜவ் கடந்த டிசம்பர் மாதம் முதலாம் கைது செய்யப்பட்டு பின்னர் நிபந்தனையின் அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவது தொடர்பான விசாரணை பிரிட்டிஷ் கொலம்பியா உச்சநீதிமன்றில் நடைபெற்று வரும் நிலையில் தற்போது அவரை நாடு கடத்துவதற்கு அனுமதி அளிப்போம் என அறிவித்துள்ள கனடா , அதற்கான நடைமுறைகளை ஆரம்பித்துள்ளது.
எனினும் இறுதி முடிவை நீதிமன்றம்தான் எடுக்கும் எனத் தெரிவித்துள்ள நிலையில் கனடா அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சீன தூதரகம் இது ஒரு அரசியல் துன்புறுத்தல் என தெரிவித்துள்ளது. எனினும் இதில் 6ம் திகதி நீதிமன்றம் இதற்கான முடிவினை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.