அனைத்து மோட்டார் வாகன ஹெட்லைட்டுகளின் மையப்பகுதியில் இரண்டு வாரத்துக்குள் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த ஒருவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் தமிழ்நாட்டில் மொத்தம் 286 நெடுஞ்சாலைகள், 5,006.14 கிலோமீற்றர் நீளத்தில் உள்ளன. நெடுஞ்சாலைகளில் செல்லும் கனரக வாகனங்கள், அதிகளவில் ஒளி தரக்கூடிய பிரகாசமான ஹெட் லைட்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால், அதிக விபத்துகள் ஏற்படுகின்றன. வாகனங்களை இயக்குவோருக்கு கண் கூசுவதால் விபத்து ஏற்படுவதாகவும், முந்தி செல்ல முயல்வதோ, அல்லது எதிரில் வரும் வாகனத்தின் தூரத்தைத் தெரிந்து கொள்வதோ சிரமமாக இருக்கிறது.
இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை நடக்கக் கூடிய விபத்துகள் பெரும்பாலும் ஹெட்லைட்டுகளால் ஏற்படுகின்றன. முகப்பு விளக்குகளின் மையப்பகுதியில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டிவிட்டால், எதிர்த் திசை ஒட்டுநர்களுக்குச் சிரமம் ஏற்படாது என தெரிவித்திருந்தார்.
இந்த மனு நேற்றையதினம் விசாபரணைக்கு வந்த நிலையில் இரண்டு வாரத்தில் மோட்டார் வாகன ஹெட்லைட்டுகளின் மையப்பகுதியில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டவும், மத்திய மாநில அரசுகள் அதனை உறுதிப்படுத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ஸ்டிக்கர் ஒட்ட தவறும் வாகன உரிமையாளர்களின் வாகனங்களைப் பறிமுதல் செய்யலாம் எனவும் தெரிவித்த நீதிபதிகள் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் 25ஆம் திகதிக்கு ஒத்திவைத்தனர்.