போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக தேசிய ரீதியாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய நிகழ்ச்சித்திட்டம் நாளை நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
நாளை (06) முற்பகல் ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் இடம்பெறும் கலந்துரையாடலின்போது இந்நிகழ்ச்சித்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்காக விஞ்ஞான பூர்வமான முறைமைகளை பயன்படுத்துவது குறித்து இன்று (05) முற்பகல் பத்தரமுல்லை, வோட்டஸ் எர்ஜ் ஹோட்டலில் இடம்பெற்ற நிபுணர்கள் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
முப்படையினர், காவல்துறையினர் ;, சுங்க திணைக்களம், மதுவரி திணைக்களம், கரையோர பாதுகாப்பு ஆகிய அனைத்து நிறுவனங்களினதும் சிறந்த ஒருங்கிணைப்புடன் நடைமுறைப்படுத்தப்படும் இந்த புதிய நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் போதைப்பொருள் ஒழிப்பிற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றத்தில் புதிய நடவடிக்கைகளை தேசமும் மக்களும் கண்டுகொள்ள முடியும் என்றும் ஜனாதிபதி ; மேலும் தெரிவித்தார்.
சட்டவிரோத போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவதற்கான சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது மனித உரிமைகளை பற்றி பேசுகின்ற சிலரால் மேற்கொள்ளப்படும் தடைகள் பற்றி கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ;, ஒரு நாட்டை சிறந்ததோர் நாடாக கட்டியெழுப்ப வேண்டுமானால் கொள்கைகளும் தண்டனைகளும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
ஒழுக்கப் பண்பாடான சமூகம் மற்றும் சிறந்த கலாசாரம் பற்றி எமது கீர்த்திமிகு வரலாற்றில் எழுதப்பட்டிருப்பது கடந்த காலங்களில் ஆன்மீக பெறுமானங்களுடன் கூடிய தண்டனைகள் நடைமுறைப்படுத்தப்பட்டதன் காரணத்தினாலாகும் என்பதையும் ஜனாதிபதி நினைவுகூர்ந்தார்.
மேலும் எதிர்வரும் வெசாக் பௌர்ணமி தினத்திற்கு முன்னர் கிராமங்களிலுள்ள சட்டவிரோத மதுபானங்களை முழுமையாக ஒழிக்கும் நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என காவல்துறை அதிபருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிப்பதற்காக தனது வழிகாட்டலின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள விசேட அதிகார சபையின் நடவடிக்கைகளும் அடுத்த மூன்று மாத காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.