யாழ்.மட்டுவில் வீட்டில் அட்காசம் புரிந்தவர்களில் சிலரை, காவற்துறையினர் கைது செய்தனர்…
யாழ்.மட்டுவில் பகுதியில் வீடொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் மூவரை சாவகச்சேரி காவற்துறையினர் கைது செய்துள்ளனர். மட்டுவில் வின்சன் வீதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு புகுந்த கும்பல் ஒன்று வீட்டின் கதவினை கை கோடாலியினால் கொத்தி சேதப்படுத்தி அட்டகாசம் புரிந்துள்ளனர்.
இலக்க தகடுகள் அற்ற மோட்டார் சைக்கிளில் சென்ற 20க்கும் மேற்பட்ட கும்பலே தாக்குதலை மேற்கொண்டு உள்ளது. குறித்த கும்பல் வீட்டின் மீது தாக்குதலை மேற்கொண்ட பின்னர் மட்டுவில் சந்தியில் கூடி நின்று அட்டகாசம் புரிந்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளரான சமாதான நீதவான் சாவகச்சேரி காவற்துறையினருக்கு அறிவித்ததை அடுத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த காவற்துறையினர் மூன்று இளைஞர்களை கைது செய்துள்ளனர். அத்துடன் அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், ஏனையவர்களையும் கைது செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
யாழ்.மானிப்பாயில் வீடு புகுந்த கும்பல் பொருட்பகளை அடித்து நொருக்கியது…
யாழ்.மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த கும்பல் ஒன்று வீட்டின் கதவுகள், யன்னல்கள் மற்றும் வீட்டிலிருந்த உபகரண பொருட்கள் என்பவற்றை அடித்து சேதமாக்கி தப்பி சென்றுள்ளது. மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு ஆறு பேர் கொண்ட வாள் வெட்டுக் கும்பல் ஒன்று புகுந்து வீட்டின் கதவுகள், யன்னல்கள், என்பவற்றை அடித்து சேதமாக்கியதுடன், வீட்டினுள் இருந்த தொலைகாட்சி பெட்டி உள்ளிட்ட வீட்டு உபகரண பொருட்களையும் அடித்து உடைத்து செதமாக்கியுள்ளது. அத்துடன் வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றையும் அடித்து சேதமாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளரால் மானிப்பாய் காவற்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மட்டுவில், சுன்னாகம் மற்றும் மானிப்பாய் ஆகிய பகுதிகளில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு வாள் வெட்டுக்குழுக்கள் நடமாடி அப்பகுதிகளில் உள்ள மூன்று வீடுகளின் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன், வாகனங்களையும் சேதமாக்கியுள்ளன. ஒரே நாள் இரவில் மூன்று இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களின் காரணமாக மக்கள் மத்தியில் ஒரு வித பீதி ஏற்பட்டு உள்ளது. அதேவேளை நேற்று முன்தினம் இரவு யாழில் உள்ள பல வீதிகளில் “ஆவா 001 ராஜ்ஜியம் “ என கறுப்பு நிற வர்ணத்தால் எழுதப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.