சீனாவை சேர்ந்த பன்னாட்டு தொலை தொடர்பு நிறுவனமான ஹூவாவி ( Huawei) நிறுவனம், அமெரிக்காவின் பொருளாதார தடைகளை மீறி ஈரானுடன் வர்த்தகம் வைத்துக்கொண்டதாக தெரிவித்து அந்நிறுவனம் மீது அமெரிக்கா பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
அத்துடன் ஹூவாய் நிறுவன அதிபரின் மகளும், நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியுமான மெங்வான்ஜவ் கனடாவின் வன்கூவர் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை தங்கள் நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.
அதனை தொடர்ந்து ஹூவாவி ( Huawei) நிறுவனம் தனது தொலை தொடர்பு சாதனங்கள் மூலம் சீனாவுக்காக உளவு பார்ப்பதாக குற்றம் சாட்டிய ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் அந்நிறுவனத்தின் பொருட்களை அமெரிக்காவில் பயன்படுத்த தடை விதித்திருந்தது.
இந்த நிலையில், தங்கள் நிறுவனத்தின் பொருட்களை பயன்படுத்த தடைவிதித்தது தொடர்பாக அமெரிக்க அரசு மீது டெக்சாஸ் மாகாணத்தின் பிளானோ மாவட்ட நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளதாக ஹூவாவி ( Huawei) நிறுவனம் தெரிவித்துள்ளது.