ஏமனில் நடைபெறும் உள்நாட்டுப் போரில் கடந்த வருடம் மட்டும் 4,800 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐ. நா. சபையின் உலக அகதிகள் அமைப்பின் சார்பில் கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்ட தரவு ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018 -ம் ஆண்டில் ஏமனில் நடக்கும் உள் நாட்டுப் போர் காரணமாக 4,800 பொது மக்கள் உயிரிழந்துள்ளதுடன் ஒவ்வொரு வாரமும் 100 பொதுமக்கள் உயிரிழந்திருக்கின்றனர் அல்லது காயமடைந்திருக்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏமனில் நடந்து வரும் உள்நாட்டு போரை நிறுத்த ஐக்கிய நாடுகள் சபை நீண்ட காலமாக பேச்சுவார்த்தை நடந்தி வருகின்ற நிலையில் பல்வேறு பேச்சு வார்த்தைகளுக்குப் பின்னர் கடந்த மாதம் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு ஏமன் அரசும், ஹவுத்தி கிளர்ச்சியாளர்களும் மீண்டும் ஒப்பு கொண்டுள்ளனர்.
ஏமனில் சன்னி பிரிவைச் சேர்ந்த ஜனாதிபதி மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் ஜனாதிபதிக்கு ஆதரவாக சவூதி அரேபியாவும் ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரானும் ஆதரவளித்து வருகின்றன.
இந்தநிலையில் இப்போரில் இதுவரை 11,000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் அவர்களில் 5,000 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது