மன்னார்ச் சம்பவத்தை – தமிழ் தேசிய நோக்கு நிலையிலிருந்து அணுகுவது – நிலாந்தன்…
2009 மே மாதத்தை உடனடுத்து வந்த காலகட்டத்தில் குரலற்ற தமிழ் மக்களின் சன்னமான ஒரு குரலாகத் திகழ்ந்தவர் முன்னால் மன்னார் ஆயரான வண. ராயப்பு யோசப். அக்காலகட்டத்தில் வேறு எந்த மதத் தலைவரும் துணிந்து பேசாத விடயங்ககைள அவர் பேசினார். தமிழ் மக்களின் நவீன அரசியலில் அவரைப் போல வேறெந்த மதத்தலைவரும் தீவிரமாகக் குரல் கொடுத்ததில்லை. 2009ற்குப் பின்னர் ஏற்பட்ட தலைமைத்துவ வெற்றிடத்தில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டிய சில ஆளுமைகளில் ஒருவராக ஆயர் ராயப்பு ஜோசப் காணப்பட்டார். இப்போதிருக்கும் திருகோணமலை மறை மாவட்ட ஆயரும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக துணிந்து செயற்படுகிறார். மூவினத்தன்மை மிக்க திருகோணமலையில் அவர் வகிக்கும் பாத்திரம் முன்மாதிரியானது. ஆயர் ராயப்பு ஜோசப்பைப் போல அவர் வெளிப்படையாக அரசியல் பேசுவதில்லை. ஆனாலும் மிகத் தெளிவான துணிச்சலான அரசியல் நிலைப்பாடுகளோடு அவர் தன்னுடைய தேவ ஊழியத்தை முன்னெடுத்து வருகிறார்.
இவ்வாறு தமிழ் மக்கள் மத்தியில் தோன்றிய மிக அரிதான மதத் தலைமைகளில் ஒன்று என்று வர்ணிக்கத்தக்க ஆயர் ராயப்பு ஜோசப் வழிநடத்திய ஒரு மறை மாவட்டத்தில் சிவராத்திரி விரதத்திற்கு முதல் நாள் இந்துக்களுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையே முரண்பாடுகள் வெடித்திருக்கின்றன. இது தற்செயலானது அல்ல. ஓர் உதிரிச் சம்பவமும் அல்ல. அதற்கொரு தொடர்ச்சி உண்டு. அதற்கொரு பின்னணி உண்டு.இருமதப் பிரிவுகளுக்குமிடையே பரஸ்பரம் ஏற்கெனவே சந்தேகங்களும் பயங்களும்,குற்றச்சாட்டுக்களும் உண்டு. ஆயர் ராயப்பு ஜோசப்பின் காலத்திலும் அவை தீர்க்கப்படவில்லை. என்பதால்தான் இப்பொழுது அவர் இல்லாத வெற்றிடத்தில் ஒரு வீதி வளைவு விவகாரமாக வெடித்திருக்கிறது. இது தமிழ்த் தேசிய அடித்தளத்தின் மீது கேள்விகளை எழுப்புகிறது. தன்னுள் நீறு பூத்த நெருப்பாக மத முரண்பாடுகளைக் கொண்டிருக்கும் ஒரு மக்கள் கூட்டம் தன்னை ஒரு பலமான தேசமாக எப்படி கட்டியெழுப்பப் போகிறது?
இது விடயத்தில் ஊடகங்கள் மத அமைப்புக்கள், சமூக வலைத்தளங்கள் என்பவற்றோடு ஒப்பிடுகையில் அரசியல்வாதிகளும் கட்சிக ளும் நிதானத்தை கடைப்பிடித்திருக்கிறார்கள் என்றே கூற வேண்டும். பெரும்பாலான தமிழ் கட்சிகளும் கருத்துருவாக்கிகளும் விமர்சகர்களும் இச்சம்பவத்தை வரவேற்கவில்லை. ஆனால் இவ்விடயத்தில் இரண்டு மதங்களுக்கும் இடையிலான பதட்டத்தைத் தணிக்கும் விதத்தில் இரு தரப்புக்குமிடையில் ஊடாடத்தக்க ஒரு பொது அமைப்பு தமிழ் மக்கள் மத்தியில் இல்லை. கட்சிகளும் மக்கள் பிரதிநிதிகளும் இது தொடர்பாக சரியான நிலைப்பாட்டை எடுத்திருந்தாலும் இரண்டு தரப்புக்களுக்குமிடையில் நிரந்தரமான இணக்கத்தை ஏற்படுத்தத் தேவையான தேசிய நோக்கு நிலையைக் கொண்ட பலமான தமிழ்த் தலைமை எதுவும் அரங்கில் இல்லை என்றே தோன்றுகிறது.
இந்த விடயத்தை நீதிமன்றம் தற்காலிகமாக தணியச் செய்திருக்கலாம். இதனால் அமைச்சர் மனோ கணேசன் இந்துக்களின் காவலன் என்ற புதிய அவதாரத்தை ஏடுக்கத் தொடங்கியிருக்கலாம். ஆனால் இது வழக்காடித் தீர்க்க வேண்டிய ஒரு விவகாரம் அல்ல. வழக்காடித் தீர்க்கப்படக் கூடிய ஒரு விவகாரமும் அல்ல. மாறாக தமிழ்த்தேசிய நோக்கு நிலையிலிருந்து மட்டும்தான் இது போன்ற பிரச்சினைகளுக்கு நிரந்தரமாக செழிப்பான தீர்வுகளைக் கண்டுபிடிக்கலாம். இது ஒரு மத முரண்பாடாக வெளிப்பட்டிருக்கலாம். ஆனால் அரசியல் அர்த்தத்தில் இது தமிழ்த்தேசிய ஐக்கியத்திற்கு பாதகமானது. எனவே விளைவைக் கருதிக் கூறின் இது ஒரு தேசியப் பிரச்சினை.அரசியல் பிரச்சினை. தேசிய நோக்கு நிலையிலிருந்துதான் இது தீர்க்கப்பட வேண்டும்.
இதைச் சட்டப் பிரச்சனையாக அல்லது மதப் பிரச்சினையாக மட்டும் அணுகினால் முரண்பாடுகள் நீறுபூத்த நிலைக்குச் சென்றுவிடும். அவை திரும்பவும் திரும்பவும் தலை தூக்கும். ஏற்கனவே முரண்பாடுகள் நீறுபூத்த நிலையில் இருந்தபடியால்தான் ஒரு வரவேற்பு வளைவு விவகாரம் இந்தளவுக்கு விகார வளர்ச்சி அடைந்தது. இது மன்னார் மாவட்டத்துக்குரிய ஒரு மத யதார்த்தம். இது யாழ்ப்பாணத்துக்கு பொருந்தாது. தமிழ் முஸ்லீம் உறவுகள் தொடர்பாக கிழக்கிற்கும் வடக்கிற்கும் இடையில்களயதார்த்த Nவுறுபாடுகள் உள்ளது போல இந்து – கத்தோலிக்க உறவிலும் யாழ்ப்பாண யதார்த்தமும் மன்னார் யதார்த்தமும் ஒன்றல்ல. இது விடயத்தில் அப்படி எந்த முரண்பாடுகளும் இல்லை என்று கூறுவது செயற்கையானது. பிரச்சனைக்கான நிரந்தரத் தீர்வை ஒத்தி வைப்பது.
மன்னாரில் பூர்வ இந்துக்களுக்கும் பூர்வ கத்தோலிக்கர்களுக்கும் இடையே செழிப்பான உறவுகள் நிலவின என்றும் திருக்கேதீச்வரத்தில் உற்சவ நாட்களில் கத்தோலிக்கர்களும் இந்துக்களோடு சேர்ந்து சமைப்பதுண்டு என்றும் கூறப்படுகிறது. பிந்திய காலங்களில் மன்னாரில் வந்து குடியேறிய தரப்புக்களே மத முரண்பாடுகளை ஊக்குவிப்பதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. பிந்தி வந்த குடியேறியவர்கள் மட்டுமல்ல 2009 இற்குப்; பின் வந்த சில மத அமைப்புக்கள் இம் முரண்பாடுகளை தமிழ்த் தேசியத் திரட்சிக்கு எதிராக வளர்த்துச் சென்று விடுமோ என்ற கேள்வி இப்பொழுது மேலெழுகிறது. வீதி வளைவு ஒரு விவகாரமாக்கப்பட்ட பின் மத நிறுவனங்கள் வெளியிட்ட அறிக்கைகள் அதைத்தான் காட்டுகின்றன. எனவே மன்னாரில் இரண்டு மதப் பிரிவினருக்குமிடையிலான முரண்பாடுகளை முழுக்க முழுக்க தமிழ் தேசிய நோக்கு நிலையிலிருந்து அணுகி தீர்க்கவல்ல தரப்புக்கள் ஓர் அமைப்பாக செயற்பட வேண்டும். தமிழத்; தேசிய நோக்கு நிலையென்பது என்ன?
தேசம் என்பது ஒரு பெரிய மக்கள் திரள். தேசியம் எனப்படுவது ஒரு பெரிய மக்கள் திரளின் கூட்டுப்பிரக்ஞை. அக்கூட்டுப் பிரக்ஞையையைப் பாதுகாப்பது என்றால் அம்மக்கள் கூட்டத்தைக் கட்டிறுக்கமான திரளாகப் பேணவேண்டும். அவ்வாறு ஒரு மக்கள் கூட்டத்தைத் திரளாகப் பேணுவதென்றால் அம்மக்களைத் திரளாக்கும் அம்சங்களைப் பாதுகாக்க வேண்டும். ஆனால் ஒரு மக்கள் கூட்டத்தைத் திரளாக்கும் எல்லா அம்சங்களும் முற்போக்கானவையாக இருப்பதல்ல.
உதாரணமாக பால் அசமத்துவம் திரளாக்கத்திற்கு எதிரானது. தேசியத் தன்மையற்றது.ஒரு ஆண் ஆதிக்கவாதி தேசியவாதியாக இருக்க முடியாது. அப்படித்தான் சாதியும், சாதி சமூகத்தில் அசமத்துவத்தை பேணுகின்;றது. அசமத்துவங்கள் சமூகத்தைப் பிளக்கும். திரளவிடாது. எனவே சாதிவாதி தேசியவாதியாக இருக்க முடியாது. மற்றது பிரதேசம். பிரதேசம் ஒப்பீட்டளவில் பெரிய ஒரு திரள். ஆனால் அங்கேயும் பிரதேச ஏற்றத்தாழ்வுகள் சமூகத்தைத் திரள விடாது. ஒரு பிரதேசம் மற்றைய பிரதேசத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும் போது அங்கே ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும். பிரதேச வாதமும் மேலெழும். அது தாயகத்தைப் பிளக்கும். எனவே வடக்கு வாதியோ அல்லது கிழக்கு வாதியோ அல்லது யாழ்ப்பாண மைய வாதியோ அல்லது வன்னி வாதியோ தேசிய வாதியாக இருக்க முடியாது.
அது போன்றதே மதமும். மதமும் பெரிய ஒரு திரள் தான். அரபுத் தேசியம் அதிகபட்சம் மத அடிப்படையிலானது. சிங்கள பௌத்த தேசியம் தேரவாத பௌத்தத்தை அடிச்சட்டமாகக் கொண்டிருப்பது. ஒரு மதம் மற்றைய மதத்தை அடக்கும் போது அல்லது மற்றைய மதங்களை விடக் கூடுதலான சலுகைகளையும் பாதுகாப்பையும் அனுபவிக்கும் போது அங்கே மதரீதியிலான ஏற்றத்தாழ்வுகளும் பிளவுகளும் ஏற்படுகின்றன. எனவே மதத்தை அடிப்படையாகக் கொண்டு தேசிய வாதத்தை கட்டியெழுப்பினால் அது மதப்பிரிவுகளை ஊக்குவிக்கும். மதப் பல்வகைமையை மறுக்கும்.அது மக்களைத் திரளாக்க விடாது. எனவே ஒரு மத வெறியர் தேசிய வாதியாக இருக்க முடியாது. இந்து வெறியரும் தேசிய வாதியாக இருக்க முடியாது. கிறிஸ்தவ வெறியரும் தேசிய வாதியாக இருக்க முடியாது.
ஆயின் எந்த அடிச்சட்டத்தின் மீது ஒரு மக்களைத் திரளாக்க வேண்டும்?ஜனநாயகம் என்ற ஒரே அடிச்சட்டத்தின் மீதுதான். ஒருவர் மற்றவருக்கு குறைந்தவரல்ல. ஒரு மதம் இன்னொரு மதத்தை விட உயர்ந்தது அல்ல. ஒரு பிரதேசம் இன்னொரு பிரதேசத்தை விட உயர்ந்ததும் அல்ல. என்ற அடிப்படையில்; ஒருவர் மற்றவருக்குச் சமம் என்ற அடிச்சட்டத்தின் மீதே மக்களைத் திரளாக்க வேண்டும். அதாவது தேசியத்தின் இதயம் ஜனநாயகமாக இருக்க வேண்டும்.அது நடைமுறையில் பல்வகைமைகளின் திரட்சியாக இருக்கவேண்டும்.இப்படிப் பார்த்தால் ஒரு பெரிய மதப்பிரிவு சிறிய மதப்பிரிவின் அச்சத்தை தேசிய நோக்கு நிலையிலிருந்தே அணுக வேண்டும். மதப் பல்வகைமையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.பல்வகைமைகளுக்கிடையில் தேசிய ஐக்கியத்தை கட்டியெழுப்பவேண்டும்.
இந்த விளக்கத்தின் அடிப்படையில்தான் மன்னார் விவகாரத்தைப் பார்க்க வேண்டும். தமிழ் மக்களிற் பெரும்பாலானவர்கள் இந்துக்கள் என்பதனால் தமிழ் தேசியம் இந்துத் தேசியமாகக் குறுகி விட முடியாது. புத்தர் சிலைகளுக்கு பதிலாக சிவலிங்கத்தை நடுவது தமிழ்த் தேசியமல்ல.அம்பாறை மாவட்டத்தில் ஒரு புத்தர் சிலை விவகாரத்தின் போது ரவூப் ஹக்கீம் சிங்கள பௌத்தர்கள் புத்தர் சிலைகளை எல்லைக் கற்களாக வைக்கிறார்கள் என்ற தொனிப்படக் குற்றம் சாட்டினார். புத்தர் சிலைகளுக்குப் பதிலாக சைவர்கள் சிவலிங்கங்கத்தை சந்திகளில் வைக்கக் கூடாது. ஏனெனில் சிங்கள – பௌத்த மேலாண்மைவாதிகள் தமிழ்த் தேசியத்திற்கு ஆசிரியர்கள் அல்ல. கலாநிதி பொ. ரகுபதி கூறியது போல சிங்கள – பௌத்தர்கள் மகாவம்சத்தில் தொங்குகிறார்கள் என்பதற்காக தமிழ் மக்கள் மாருதப்புரவல்லியின் ஐதீகத்தில் தொங்கிக் கொண்டிருக்க முடியாது. ஏனெனில் தேசியம் எனப்படுவது ஒரு நவீன சிந்தனை. ஒருவர் மற்றவருக்கு சமம் என்ற அடித்தளத்தின் மீது அதைக் கட்டியெழுப்ப வேண்டும்.நவீன தேசியம் ஒரு குறுக்கமல்ல. அது ஒரு விரிவு.அது பல்வகைமைகளின் திரட்சி. தமிழ் மக்களை ஒரு தேசமாக அங்கீகரித்து அவர்களுக்குரிய கூட்டு உரிமைகளை பாதுகாக்கும் ஒரு தீர்வை உருவாக்கிய பின் தமிழ்த் தேசியம் அதன் அடுத்த கட்ட விரிவிற்குப் போக வேண்டும். அதாவது சர்வதேசியமாக விரிய வேண்டும்.
எனவே தமிழ்த் தேசியம் ஓர் இந்துத் தேசியமாக குறுகுவதைத் தடுக்க விழையும் அனைவரும் தமிழ்த்; தேசிய பரப்பிற்குள் இருக்க வேண்டிய மதப் பல்வகைமையைப் பலப்படுத்த வேண்டும். மக்களைத் திரளாக்கும் அம்சங்களுக்குள் பிற்போக்கானவற்றைப் பின்தள்ளி முற்போக்கானவற்றைப் பலப்படுத்த வேண்டும். மதம், பிரதேசம், சாதி போன்றவற்றின் அடிப்படையில் மக்களைத் திரளாக்குவது தேசியத்திற்கு எதிரானது. பதிலாக ஜனநாயக அடிச்சட்டத்தின் மீது ஒருவர் மற்றவருக்குச் சமம். ஒரு மதம் மற்ற மதத்திற்குச் சமம் என்ற அடிப்படையில் மக்களைத் திரளாக்க வேண்டும். ஒரு மதம் மற்ற மதத்திற்கு சமம் என்ற ஓரு சமூக உடன்படிக்கையே தமிழ் தேசியத்தை பலப்படுத்தும். எனவே எங்கெல்லாம் சிறுபான்மையாகவுள்ள அல்லது பலம் குன்றிய மதப்பிரிவுகள் பெரிய மதப்பிரிவைக் கண்டு பயப்படுகின்றனவோ அங்கெல்லாம் மதப்பிரிவினர்களுக்கிடையே சம அந்தஸ்தை உருவாக்கி ஒரு சமூக உடன்படிக்கையைக் கட்டி எழுப்ப வேண்டும.; பல்வகைமைகளைப் பலப்படுத்த வேண்டும்.ஜெனீவா கூட்டத்தொடரில் தமிழ் மக்கள் தங்களை ஒரு திரளாகக் காட்ட வேண்டிய ஒரு கால கட்டத்தில் மன்னாரில் தமிழ் மக்கள் சிறு சிறு திரள்களாக சிதறிப் போகக் கூடாது.
தமிழ் தேசியத்தின் பெரும்பான்மை சனத்தொகை இந்துக்கள்தான். அதனால் பெரும்பான்மையாக உள்ள இந்துக்கள் இது விடயத்தில் சிறுபான்மையினரின் பயங்களையும் தற்காப்பு உணர்வையும் விளங்கிக் கொள்ள வேண்டும். இந்துக்கள் தமது ஆன்மீகச் செழிப்பை காட்ட வேண்டிய இடம் இது. மன்னாரில் இந்துக்கள்மற்றும் முஸ்லிம்கள் தொடர்பில் கத்தோலிக்கர்களுக்கும், கத்தோலிக்கர் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பில் இந்துக்களுக்குமுள்ள கவலைகளையும் அச்சங்களையும் தமிழ்த்தேசிய நோக்கு நிலையிலிருந்து விளங்கிக் கொள்ள வேண்டும்.
தமிழ்த்தேசியம் என்றைக்குமே இந்துத்தேசியமாக குறுகியதில்லை. புரட்டஸ்தாந்து மதத்தைச் சேர்ந்த ஹன்ரி பேரின்பநாயகம் முதலாவது இளைஞர் அமைப்பைக் கட்டியெழுப்பினார். 1930களில் அவர் கேட்டுக்கொண்டதிற்கிணங்க தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாகத் தேர்தலைப் புறக்கணித்தார்கள். தந்தை செல்வாவும் ஒரு புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர்;. அவரை ஈழத்தமிழர்கள் தந்தை என்று விளித்தார்கள்.அவர் இறக்கும் போது தன்னை நேசித்த மக்களுக்காக இந்து முறைப்படி தன்னைத் தகனம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவருடைய பூதவுடல் வேட்டி கட்டப்பட்டு முற்றவெளியில் தகனம் செய்யப்பட்டது. ஆயுதப் போராட்டத்தில் எந்த இயக்கமாவது மத அடையாளத்தை முன்நிறுத்தியதா? இப்படிப்பட்ட செழிப்பான ஓர் அரசியல் பாரம்பரியத்தை கொண்ட தமிழ் மக்கள் மன்னார் விவகாரத்தையும் அப்பாரம்பரியத்திற்கூடாகவே அணுக வேண்டும்.