அமெரிக்காவுக்கு நன்மை அளிக்கும் என்றால் மட்டுமே சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுமத் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, சீனா இடையே வர்த்தக உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதன் காரணமாக சீன பொருட்கள் மீது அமெரிக்கா 250 பில்லியன் டொலருக்கு கூடுதல் வரி விதித்தததனையடுத்து சீனாவும் அமெரிக்க பொருட்கள் மீது 110 பில்லியன் டொலர் கூடுதல் வரி விதித்தது.
எனினும் அமெரிக்க மற்றும் சீனத் தலைவர்கள் ‘ஜி-20’ உச்சி மாநாட்டின் போது சந்தித்து கலந்துரையாடிய போது இரு தரப்பு வர்த்தகப் போரை நிறுத்தி வைக்கவும், ஜனவரி முதலாம் திகதி முதல் 90 நாட்களுக்கு கூடுதல் வரிகளை விதிப்பதில்லை எனவும் ஒப்புக்கொண்டனர்.
அதைத் தொடர்ந்து இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தம் போடுவதற்கு, அமெரிக்கா மற்றும் சீன வர்த்தக அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையிலேயே நேற்றுமுன்தினம் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய ட்ரம்ப் சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என்பதில் நம்பிக்கை உள்ளது என்ற போதிலும் அமெரிக்காவுக்கு நன்மை அளிக்கும் என்றால் மட்டும்தான் சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.