எதிர்காலத்தில் புதிய தொழில் மார்க்கங்கள் ஊடாக இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களில் ஈடுபடுவதற்கு அவகாசங்களை ஏற்படுத்திக் கொடுக்க உள்ளதாக தெரிவித்த பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க , மத்திய கிழக்கு நாடுகளுக்கு மாத்திரமல்லாமல் யப்பான், அமெரிக்கா போன்ற அபிவிருத்தி அடைந்த நாடுகளில் தொழில்களில் ஈடுபடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்காக பயிற்சிகளை வழங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கையினை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சர் ஹரின் பெர்னாந்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் வெளிநாட்டு பணியாளர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் பெற்றுக் கொடுக்கும் சலுகைகளை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் அலரிமாளிகையில் இடம்பெற்ற வெளிநாடுகளில் பணிபுரிகின்ற பெற்றோர்களின் குழந்தைகளுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க இக்கருத்துக்களை தெரிவித்தார்.
வெளிநாட்டு வேலைவாய்;ப்பு பணியகத்தில் பதிவு செய்துள்ள வெளிநாடுகளில் பணிபுரியும் பெற்றோர்களின் குழந்தைகளுக்காக இப்புலமைப்பரிசில் வழங்கப்படுவதுடன், மேல் மாகாணத்தில் 773 குழந்தைகளுக்கு நேற்றையதினம் புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது