குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
2019 ஆம் ஆண்டிற்கான இரணைமடுவின் கீழ் தீர்மானிக்கப்பட்ட சிறுபோக நெற்செய்கை அளவுக்கு மேலதிகமாக பயிர்செய்கை நடவடிக்கைகளில் ஈடுப்படும் விவசாயிகளின் நீர் உரிமை இரத்துச் செய்யப்படும் என இரணைமடு சிறுபோக குழு கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று(12) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்திலேயே இம் முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரணைமடுகுளத்தின் கீழ் 2019 ஆம் ஆண்டுக்கான சிறுபோகம் 15 ஆயிரம் ஏக்கர் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இரணைமடுவின் கீழ் உள்ள 21 கமக்கார அமைப்புகளின் கீழும் தீர்மானிக்கப்பட்ட அளவுகளில் விதைப்புகள் இடம்பெறும். மாறாக இதனை கவனத்தில் எடுக்காது கடந்த காலங்கள் போன்று விவசாயிகள் மேலதிக விதைப்பில் ஈடுப்பட்டால் அவர்களின் நீர் உரிமை பின்வரும் அடிப்படையில் இரத்துச் செய்யப்படும்.
ஆதாவது தீர்மானிக்கப்பட்ட அளவை விட 25 வீதம் மேலதிக விதைப்பில் ஈடுப்பட்டால் ஒரு வருடத்திற்கும், 50 வீத மேலதிக விதைப்பில் ஈடுப்பட்டால் இரண்டு வருடத்திற்கும், 75 வீத மேலதிக விதைப்பில் ஈடுப்பட்டால் மூன்று வருடத்திற்கும், நூறு வீத மேலதிக விதைப்பில் ஈடுப்பட்டால் நான்கு வருடத்திற்கும் நீர் உரிமை இரத்துச் செய்யப்படுவதோடு, தேவை ஏற்படின் மேலதிக நெல் விதைப்பு அழிக்கவும் இன்றையக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது