கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் – ஒருங்கிணைப்பாளர் கைது…
பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தால் பாராளுமன்ற வளாகத்தில் இன்று பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
கொழும்பு கலைப்பீடத்திற் அருகில் பேரணியாக ஆரம்பிக்கப்பட்டு பாராளுமன்ற வளாகம் வரை சென்ற அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது காவற்துறையினர் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தினை மேற்கொண்டனர். இதன் போது அனைத்து பல்கலைக்கழக ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் கைதுசெய்யப்பட்டார்.
பயங்கரவாத தடைசட்டத்திற்கு பதிலாக பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை உருவாக்கவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவே இவ்வாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது நாடளாவிய ரீதியில் இருந்து சுமார் 4 ஆயிரம் பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பு கலை பீடத்திலிருந்து பேரணியாக பாராளுமன்ற வளாகத்திற்குள் செல்ல முற்பட்டனர். இதன் போது ‘பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கு’ , ‘பங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை அமுல்படுத்த வேண்டாம் ‘ என்ற பதாகைகளை ஏந்திய வண்ணமும் , கோஷங்களை எழுப்பிய வாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டப் பேரணி மீது காவற்துறையினர் கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் நடத்தியதுடன், பாராளுமன்றத்துக்கு நுழையும் வீதியும் தற்காலிகமாக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
1 comment
146,000 அப்பாவி தமிழ் மக்களை கொன்று, ஆயிரக்கணக்கான சுதந்திர போராளிகளைக் கொன்று, சந்தேகத்திற்குரிய தமிழர்கள் எனக் கருதப்பட்டவர்களைக் கொன்று, பயங்கவாத தடை சட்டத்தின் கீழ் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களை வைத்து தமிழர்களை குற்றவாளிகளாக்கி சிறையில் அடைத்து, மற்றும் வேறு பல கொடூர குற்றங்களைச் செய்த பின்பும் சிறையில் உள்ள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்காமல் அவர்களை குற்றவாளிகளாக்க அரசாங்கம் துடிக்கின்றது. இதை மாற்றி அமைக்க இலங்கையின் சாதாரண குற்றவியல் சட்டங்களே போதுமானவை, பழைய மற்றும் புதிய பயங்கரவாதம் தொடர்பான சட்டங்களை உடனடியாக நீக்க வேண்டும் என்று தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஏனைய தமிழர்கள் மற்றும் உலகளவில் உள்ள ஆதரவாளர்கள், தொடர்ச்சியாகக் கோர வேண்டும்.