குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட மயிலிட்டி பகுதியில் உள்ள வீடொன்றின் அத்திபாரத்தின் கீழிருந்து இரண்டு கண்ணிவெடிகள் மற்றும் ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் என்பன மீட்கப்பட்டு உள்ளன.
பருத்தித்துறை – காங்கேசன்துறை வீதியில் மயிலிட்டி பகுதியில் மீள் குடியேறி தமது வீட்டில் வசித்து வருபவர்கள் , வீட்டினை சுற்றி முன்னர் இருந்த மதில் இடித்தழிக்கப்பட்டு இருந்த நிலையில் அதனை மீள அமைக்கும் பணிக்காக நேற்று புதன்கிழமை ஏற்கனவே இருந்த மதில் அத்திபாரத்தை தோண்டிய போது , இரண்டு கண்ணிவெடிகளும் , நூல் சாக்கில் சுற்றப்பட்ட நிலையில் ஒரு தொகை துப்பாக்கி ரவைகளும் கண்டெடுக்கப்பட்டன.
அதனை அடுத்து வீட்டு உரிமையாளர் கிராம சேவையாளருக்கு தகவல் வழங்கியதை அடுத்து , அது தொடர்பில் காவல்துறையினருக்கு கிராம சேவையாளர் அறிவித்தததனையடுத்து காவல்துறையினர் வெடி பொருள் அகற்றும் பிரிவினருக்கு அறிவித்து அவற்றை அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.
குறித்த பகுதிகள் மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்பட்டு இரண்டு வருடங்களுக்கு மேலாகிய நிலையிலும் அப்பகுதியில் ஆபத்தான வெடி பொருட்கள் காணப்படுவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.