புல்வாமா தாக்குதலுக்கு மசூத் அசார் தலைமையிலான ஜெய்ஷ் இ முஹம்மது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றதால் அந்த இயக்கத்துக்கு சொந்தமாக பிரான்ஸில் இருக்கும் சொத்துக்கள் அனைத்தையும் முடக்கப்போவதாக பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது.
பிரான்ஸ் உள்துறை அமைச்சகம், நிதி அமைச்சகம், வெளியுறவுத் துறை அமைச்சகம் ஆகியவை வெளியிட்ட கூட்டறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ் இ முஹம்மது தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் சி.ஆர்.பி.எப். படை வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் ஜெய்ஷ் இ முஹம்மது தீவிரவாத இயக்கமே காரணம் என இந்திய தேசிய புலனாய்வு துறை அதிகாரிகளின் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவனாக இருக்கும் மசூத் அசாரை தடை செய்யப்பட்ட சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் சார்பில் ஐ.நா. பாதுகாப்பு சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை தனது ‘வீட்டோ’ சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி சீனா தடுத்துள்ளது.
இதனை அடுத்து தீவிரவாதச் செயல்களில் தொடர்புடையவர்கள் பற்றிய ஐரோப்பிய ஒன்றியத்தின் பட்டியலில் மசூத் அசாரை சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவின் பக்கமே பிரான்ஸ் இருந்துள்ளது எனவும் எப்போதும் அப்படியே இருக்கும் எனவும் பிரான்ஸ் தெரிவித்துள்ளது.