குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பருத்தித்துறை திக்கம் பகுதியில் சுமார் ஒரு கோடியே 30 லட்சம் பெறுமதியான 88 கிலோ 76 கிராம் எடையுடைய கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதனை கடத்த முயற்சித்தனர் என்ற குற்றச்சாட்டில் அதே இடத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரும் கடற்படையினரும் முன்னெடுத்த நடவடிக்கையிலேயே இந்த கேரள கஞ்சா கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டது என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
கொழும்பு போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் போதைப் பொருள் தடுப்பு காவல்துறை உத்தியோகத்தர்களும் கடற்படையினரும் இணைந்து பருத்தித்துறை திக்கம் பகுதியில் கடத்தலுக்கு தயாராகவிருந்து நிலையில் 88 கிலோ 76 கிராம் நிறையுடைய கேரள கஞ்சா பொதிகளைக் கைப்பற்றினர்.
அதன்பெறுமதி ஒரு கோடியே 33 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதனைக் கடத்த முயற்சித்தனர் என்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்கள் இருவரும் பருத்தித்துறை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், சான்றுப்பொருளும் கையளிக்கப்பட்டது’ என்று காவல்துறையினர்; தெரிவித்தனர்.
விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் இருவரும் பருத்தித்துறை நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது.